மழைக்காடுகளை காக்கும் விண்வெளி வாத்துகள்!
உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் காட்டை, 280 விண்வெளி வாத்துகள் காவல்காத்து வருகின்றன.
விண்வெளி விஞ்ஞானிகளின் செல்லப்பிள்ளைகளான செயற்கை கோள்கள்தான், காட்டு ஆர்வலர்களால் ‘விண்வெளி வாத்துகள்’ என்று வர்ணிக்கப்படுகின்றன.
பிரேசில் நாட்டின் பாரா மாநிலத்தில் ஒவ்வொரு வாரமும், அமேசான் மழைக்காடுகளின் அளவு சுருங்கி வருவது புகைப்படங்களுடன் ஆதாரமாக சமர்ப்பிக்கப்படுகிறது. அமெரிக்காவின் செயற்கை கோள்கள் தினமும் காலை 10.30 மணிக்கு புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்கிறது. வாரம் ஒருமுறை அது விவாதப் பொருளாகிறது. காடுகளின் பாதுகாப்பு முடுக்கிவிடப்படுகிறது.
காடுகளின் அழிவு பற்றி கவலைகொண்ட தன்னார்வலர்கள் ‘பிளானெட்’ என்ற அமைப்பை தொடங்கினார்கள். 2010-ல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, முன்னாள் நாசா விஞ்ஞானிகள் 3 பேரை உள்ளடக்கிய குழுவைக் கொண்டு எளிமையான செயற்கை கோள்களை உருவாக்கி, காடுகளின் அழிவை கண்காணிக்கத் தொடங்கியது.
“முன்பு 6 நாட்களுக்கு ஒருமுறை படம் பிடித்து கண்காணிக்கப்பட்டது. அப்போது அதிக பரப்பளவிலான காடுகள் அழிக்கப்படுவது தெரியவந்ததால், இப்போது தினமும் படம் பிடித்து கண்காணிக்கிறோம். சந்தேகப்படும் நபர்களை கண்காணிப்பு வளையத்தில் வைத்து காடு அழிப்பை தடுக்கிறோம்” என்கிறார்கள் அமைப்பின் நிர்வாகிகள்..
இதற்கான செயற்கை கோள்களை தயாரிக்கும் விஞ்ஞானிகள் குழு சொல்கிறது, “பிளானெட் என்பது சிறிய செயற்கை ேகாள்கள் குழுவின் தலைவன் என்று கூறலாம். இவற்றை மிக எளிதாக உருவாக்கவும், மாற்றிய அமைக்கவும் முடியும். 3 அல்லது 5 ஆண்டுகள் வரை இந்த சிறிய செயற்கை கோள்கள் ஆய்வுப் பணியில் ஈடுபடுகின்றன. 2013 முதல் 298 செயற்கை கோள்கள் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது 150 செயற்கை கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 130 செயற்கை கோள்கள் நானோ செயற்கை கோள்களாகும்.” என்கிறது.
இந்த சின்னஞ்சிறு செயற்கை கோள்களை விஞ்ஞானிகள் செல்லமாக “வாத்து” செயற்கை கோள்கள் என்கிறார்கள்.
“இவற்றை எளிமையாக வடிவமைக்க முடியும் என்பதால், ஒருவர், ஒரே நாளில் 3 செயற்கை கோள்களை செய்துவிட முடியும்” என இந்த செயற்கை கோள் குழுவின் தலைவர் கில்மோர் கூறுகிறார். “இதற்கு சாதாரண கருவிகள் போதும், 30 சென்டிமீட்டர் சிலிண்டர் போல இருக்கும். துல்லியமான கேமராவும், 50 சிப்களும், 2 சூரியசக்தி தகடுகளும் மட்டும் இதில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த செயற்கை கோள்களை உருவாக்க சுத்தமான அறை எதுவும் தேவையில்லை. பார்வையாளர்கள் வந்துபோகும் சாதாரண இடத்திலேயே தயாரித்துவிட முடியும். இதை கியூப்சாட் 3யூ என்றும் அழைப்பதுண்டு.” என்கிறார் அவர்.
குள்ள வாத்துகளான இந்த செயற்கை கோள்கள் 500 கி.மீ. உயரத்தில் வலம்வந்தபடி அமேசான் காட்டை கண்காணிக்கின்றன. பூமியின் ஒவ்வொரு சதுர கிலோமீட்டரையும் படம்பிடிக்க வல்லவை இந்த வாத்துகள்.
இந்தியாவிற்கும் 6 வாத்து செயற்கை கோள்கள் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன. அவை அடுத்த செயற்கைகோள் ஏவுதலின்போது விண்வெளிக்கு செல்ல உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பால் ஆலன், பவளப்பாறை ஆய்வுகளுக்காக இத்தகைய செயற்கை கோள்களை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். இந்த விண்வெளி வாத்துகளின் பணி வாழ்த்த வேண்டியதுதான்!
Related Tags :
Next Story