பொள்ளாச்சி அருகே வஞ்சியாபுரத்தில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு, சப்–கலெக்டரிடம் மனு


பொள்ளாச்சி அருகே வஞ்சியாபுரத்தில் மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு, சப்–கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 18 Sept 2018 4:15 AM IST (Updated: 17 Sept 2018 6:49 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே வஞ்சியாபுரத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்– கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது வஞ்சியாபுரம் பகுதி பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

 வஞ்சியாபுரம் பிரிவு மேற்கு பகுதி விநாயகர் நகரில் 60 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றோம். மேலும் எங்கள் குடியிருப்பு அருகில் வஞ்சியாபுரம் கிராமம் உள்ளது. இங்கு 275 குடும்பங்கள் உள்ளன. இதற்கிடையில் இந்த பகுதியில் உள்ள வாய்க்கால் அருகில் புதிதாக கட்டிடம் கட்டி, அந்த கட்டிடத்தில் அரசு மதுபான கடை திறக்க உள்ளதாக தெரிகிறது. குடியிருப்பு பகுதியில் மதுக்கடையை திறந்தால் பெண்கள், பள்ளி மாணவ–மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். மேலும் அதை சுற்றி விவசாய நிலங்கள் உள்ளன. குடித்து விட்டு பிளாஸ்டிக் டம்ளர், குடிநீர் பாக்கெட்டுகளை விவசாய நிலத்தில் வீசி விட்டு சென்று விடுவார்கள். இதனால் மேலும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே வஞ்சியாபுரத்தில் குடியிருப்பு அருகில் மதுக்கடை திறக்க அனுமதி வழங்க கூடாது. மதுக்கடையை பொதுமக்கள் இல்லாத இடங்களில் மாற்றி அமைக்க வழிவகை செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள கெங்கம்பாளையம் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பெத்தநாயக்கனூர் ஊராட்சி கெங்கம்பாளையத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றது. மதுக்கடைகளில் இருந்து குறைந்த விலைக்கு பாட்டில்களை வாங்கி வந்து ஒரு சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். விற்பனையை தடுத்து நிறுத்த கோரி சம்பந்தபட்ட உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கெங்கம்பாளையத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பொள்ளாச்சி தாலுகா வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி 7–வது வார்டு தெற்கு மேட்டுதெருவில் 300–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story