மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வீடு கட்டித்தரக்கோரி பொதுமக்கள் மனு
ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மருத்துவர் சமூக மக்கள் தங்களுக்கு பிரதமரின் திட்டத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என்று மனு அளித்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். அதில் பரமக்குடியை சேர்ந்த மருத்துவர் சமூகத்தை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் வந்து மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:–
மருத்துவர் சமூகத்தை சேர்ந்த எங்களுக்கு அரசின் சார்பில் கடந்த 1986–ம் ஆண்டு வேந்தோணி பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதன்மூலம் 84 பேர் மனை பெற்றுள்ளனர். இந்த நிலத்தில் ஒரு பகுதியை மாற்று திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் மத்திய அரசின் வீடுகட்டும் திட்டத்தின் நிதி வழங்கி வீடு கட்டித்தர வேண்டும்.
ஏற்கனவே பாம்பு விழுந்தான் பகுதியில் எங்கள் சமூகத்தை சேர்ந்த 100 பேருக்கு கடந்த 1994–ம் ஆண்டு வழங்கப்பட்ட நிலத்தினை பல்கலைக்கழக கல்லூரி கட்டிடம் கட்டுவதற்காக நிலம் எடுத்துக்கொண்ட நிலையில் அவர்களுக்கு இதுவரை மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு வீடு கட்டி தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் பகுதியை சேர்ந்த செந்தாமரை கண்ணன் மனைவி ராதிகா என்பவர் தனது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும், தான் அந்த பகுதியில் உள்ள வேறு சமுதாய மக்களிடம் சகஜமாக பழகுவதை கண்டித்து தன்னை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து விட்டதாகவும், ஊரை காலி செய்யும் படி கூறி சிலர் தொடர்ந்து தொல்லை தருவதாகவும் கூறி மனுகொடுத்தார்.மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் வீரராகவராவ் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பதிலளிக்க உத்தரவிட்டார். பின்னர் அதிகாரிகளிடம் கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:– குறைதீர்க்கும் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்டுள்ள நாளுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து பதிலளிக்க வேண்டும்.
முதல்–அமைச்சரின் தனிப்பிரிவின் மூலம் வரும் மனுக்களை உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு அதிகாரிகளும் தங்கள் அலுவலக பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரப்படுத்தி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.