வில்லியனூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
வில்லியனூர்,
வில்லியனூர் அருகே அகரம் கிராமத்தை சேர்ந்த சுந்தரி என்பவரின் மகன் ராகுல் (வயது 19). நேற்று முன்தினம் இரவு கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த தனது நண்பர் மதனுடன் (19) அகரம் கிராமத்தில் இருந்து வில்லியனூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளை ராகுல் ஓட்டினார்.
கூடப்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகே வந்தபோது முன்னால் சென்ற காரை ராகுல் முந்திச்செல்ல முயன்றார். அப்போது எதிரே வானூர் தாலுகா கடப்பேரிக்குப்பத்தை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் ஆனந்த கார்த்திக் (19) ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளும், ராகுல் சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இதில் தூக்கி வீசப்பட்ட ராகுல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மதன் மற்றும் ஆனந்த கார்த்திக் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஆனந்த கார்த்திக் பரிதாபமாக இறந்துபோனார்.
மதன் புதுவை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அகரம், கடப்பேரிக்குப்பம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.