அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி; வாலிபர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி; வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Sept 2018 4:15 AM IST (Updated: 19 Sept 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

வளசரவாக்கத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், ஏ.வி.எம். அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சரன் பார்த்திபன் (வயது 29). வளசரவாக்கத்தில் அலுவலகம் நடத்தி வருகிறார்.

இவர் சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணி துறை, மின்சார துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சூளைமேட்டை சேர்ந்த சுந்தரேச பாண்டியன், ஹரிகரன், லட்சுமி காந்தன் ஆகிய 3 பேரிடம் சுமார் ரூ.50 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் வாக்குறுதி அளித்தபடி அவர்களுக்கு அரசு வேலை வாங்கி தரவில்லை. மேலும் அவர்கள் பணத்தை திருப்பிகேட்டபோது கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இது தொடர்பாக சுந்தரேச பாண்டியன் உள்ளிட்ட 3 பேரும் தியாகராய நகரில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறி அந்த புகார் மனு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில் வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

இது தொடர்பாக சரன் பார்த்திபனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறியதாவது:-

சரன் பார்த்திபன் ஆடம்பரமாக வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பலரிடம் அவர்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார்.

தன்னிடம் அரசு வேலை கேட்டு வரும் நபர்கள் தன்னை நம்ப வேண்டும் என்பதற்காக அடிக்கடி அவர்களை தலைமை செயலகத்திற்கு அழைத்து சென்று அவர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் உதவியாளர்களிடம் நன்கு அறிமுகம் ஆனவர் போல் சகஜமாக பேசுவார்.

இதனை பார்க்கும் அவர்கள் நமக்கு நிச்சயம் அரசு வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் அவரிடம் பணம் கொடுப்பார்கள். பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அவர் அவர்களை ஏமாற்றி விடுவார். இவரிடம் இப்படி பலர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சமீபத்தில் ஏமாற்றப்பட்ட 3 பேர் அளித்த புகார் மூலம் தான் அவர் போலீசில் சிக்கினார். எனவே இவர் மீது மேலும் பல புகார்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

இதையடுத்து போலீசார் சரன் பார்த்திபனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story