காங்கேயம் அருகே விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
காங்கேயம் அருகே விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
காங்கேயம்,
காங்கேயம் அருகே உள்ள சடையபாளையம், இல்லியம்புதூர் மற்றும் ராமபட்டினம் ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று சடையபாளையம் கிராமத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் குழி தோண்ட பயன்படுத்தும் வாகனத்தை கொண்டு வந்து பணியாளர்கள் அளவீடு செய்து குழி பறித்தனர்.
அப்போது அங்கு வந்த ராமசாமி, என்னுடைய அனுமதி இல்லாமல் எனது விவசாய நிலத்தில் எப்படி குழி பறிக்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த குழி பறிக்கும் வாகனத்தையும், பணியாளர்கள் கொண்டு வந்த இரு சக்கர வாகனங்களையும் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இது குறித்த தகவல் கிடைத்ததும் சமபந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் சிறை பிடிக்கப்பட்ட வாகனங்களை விடுவித்தனர். இதனால் அனுமதி இல்லாமல் இங்கு குழி பறிக்க மாட்டோம் என்று கூறிய அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
இது பற்றி போராட்டம் நடத்திய கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் வட்டார தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், விவசாய நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். விவசாய நிலத்தில் உயர் மின் கோபுரம் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். அத்துடன் உயர்மின் கோபுரங்கள் அமைத்தால் அந்த நிலத்தில் எந்த ஒரு பணியும் செய்ய முடியாது. வீடு கட்ட கூட முடியாத நிலை ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நெடுஞ்சாலைகள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க வேண்டும் என்றார்.