பேக்கரிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட கலப்பட டீத்தூள் பறிமுதல்


பேக்கரிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட கலப்பட டீத்தூள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Sep 2018 10:45 PM GMT (Updated: 18 Sep 2018 7:43 PM GMT)

பல்லடம் அருகே பேக்கரி மற்றும் கடைகளுக்கு வினியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கலப்பட டீத்தூள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் கடைகளுக்கு கலப்பட டீத்தூள் வாகனங்களில் கொண்டு சென்று வினியோகம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தமிழ் செல்வனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்லடம் அருகே உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் கேசவராஜ், பாலமுருகன், சதீஸ்குமார், மணி, எட்டிக்கன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து அவர் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் பேக்கரி மற்றும் டீக்கடைகளுக்கு வினியோகம் செய்ய டீத்தூள் கொண்டு செல்வது தெரியவந்தது. அந்த டீத்தூளை பார்த்தபோது அவை அனைத்தும் கலப்பட டீத்தூள் என தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரை விசாரணை செய்தபோது அவர் கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்த சரவணன் (வயது 38) என்று தெரியவந்தது. இதையடுத்து அவர் வைத்திருந்த 61 கிலோ கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்தனர். மேலும் அவற்றின் மாதிரியை எடுத்து ஆய்வுக்கூட சோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் அந்த பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் கடைகளுக்கு வினியோகம் செய்ய கொண்டு சென்றது தெரியவந்தது.

மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் கேத்தனூரில் உள்ள கிருஷ்ணா பேக்கரிக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பேக்கரியில் சாயமேற்றப்பட்ட கலப்பட டீத்தூள் பயன்படுத்தி டீ தயாரித்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து டீ போட வைத்திருந்த 10 கிலோ சாயமேற்றப்பட்ட டீத்தூளை பறிமுதல்செய்தனர். மேலும் அவற்றின் மாதிரி சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக பேக்கரியின் உரிமையாளர் மூக்கையன் மீது உணவு பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னர் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பின்னர் அருள்புரம்–பல்லடம் சாலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி, சோதனை செய்தபோது அந்தவேனில் கலப்பட டீத்தூள் கொண்டு செல்வது தெரியவந்தது. விசாரணையில் அந்த வேனில் கலப்பட டீத்தூளை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளுக்கும், கடைகளுக்கும் விற்பனை செய்ய கொண்டு சென்றவர் பொள்ளாச்சியை சேர்ந்த என்.முரளிகிருஷ்ணன் (46) என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த வேனில் கொண்டு சென்ற 150 கிலோ கலப்பட டீத்துளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் கலப்பட டீத்துளை உணவு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு உணவு ஆய்வறிக்கையின் படி கோர்ட்டில் முரளிகிரு‌ஷஷ்ணன் மீது வழக்கு தொடரப்படும் என்றும், புகையிலை பொருட்கள், பான் மசாலா, கலப்பட டீத்தூள், தரம் குறைந்த உணவு பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், வாட்ஸ் அப் 94440–42322 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story