டிராக்டர் டிரைவர் கொலை வழக்கு: கல்லூரி மாணவர் உள்பட 3 வாலிபர்கள் கைது


டிராக்டர் டிரைவர் கொலை வழக்கு: கல்லூரி மாணவர் உள்பட 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 19 Sept 2018 4:15 AM IST (Updated: 19 Sept 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

டிராக்டர் டிரைவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவர் உள்பட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி கல்குறிச்சி தேவேந்திர தெருவைச் சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் பெரியசாமி(45). இவருடைய மனைவி மணிமேகலை(37). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

இவர்களில் மூத்த மகன் அஜீத் லாரி கிளனராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் குடிப்பழக்கம் இருந்த பெரியசாமி வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரியசாமி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பெரியசாமியின் மூத்த மகன் அஜீத் தனது தந்தையை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்்தனர்.

மேலும் இறந்த பெரியசாமி, தனது மனைவியிடம் தகராறு செய்து கொண்டு வேறு சில பெண்களிடம் தொடர்பு வைத்து வந்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்த அஜீத், தந்தையை கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் அந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அஜீத்தின் நண்பரான நாமக்கல் அடுத்த கொசவம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார்(20) என்பவரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த கொலை வழக்கில் அஜீத்தின் நண்பர்களான ராம்குமார்(20), பிரசாந்த்(21), நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வரும் மதுக்குமார்(20) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த ராம்குமார், பிரசாந்த், மதுக்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story