அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை போராட்டம் தொடரும் - சேலத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்


அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை போராட்டம் தொடரும் - சேலத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
x
தினத்தந்தி 19 Sept 2018 5:00 AM IST (Updated: 19 Sept 2018 4:09 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசை கண்டித்து சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.ஆட்சியை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று ஆவேசமாக கூறினார்.

சேலம்,

குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை சேலம் மத்திய, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரிகள் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஜெகத்ரட்சகன், சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்யக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

கடந்த 8-ந் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஊழல் நிறைந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மதவாதம் ஒன்றை அடிப்படையாக வைத்து மத்தியில் ஆட்சி நடத்துகின்ற மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற உணர்வோடு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இங்கு ஆர்வத்துடன், திரண்டிருக்கிற மக்கள் என்ன நினைக்கிறார்கள்?, ஏதோ தேர்தல் வரும் வரையில் இந்த ஆட்சி இருக்கும் என்று கருத வேண்டாம். அதற்கு முன்பே இந்த ஆட்சி அப்புறப்படுத்தப்படும் என்ற உணர்வு இன்றைக்கு, அரசியல் கட்சியை சார்ந்திருக்கக்கூடிய எங்களுக்கும் மட்டும் இருக்கிறது என்று கருதவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அதே உணர்வோடு இருக்கிறார்கள்.

தி.மு.க. தலைவராக பொறுப்பு ஏற்றதற்கு பின்பு, முதன் முதலாக நடைபெறுகிற இந்த போராட்டத்தில் பங்கேற்க சேலத்துக்கு வந்துள்ளேன். நான் ஏன் இந்த போராட்டத்திற்கு சேலத்தை தேர்வு செய்தற்கு என்ன காரணம் என்று கேட்டால், 1949-ம் ஆண்டு இதே சேலம் கோட்டையில் குடியிருந்து வாழ்ந்தவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் கருணாநிதி. அவர் சேலத்தில் உள்ள மாடர்ன்ஸ் தியேட்டருக்காக பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி இருக்கிறார். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மந்திரிகுமாரி. அந்த படத்திற்கு தலைவர் கலைஞர் கதை வசனம் தீட்டினார்கள். அந்த திரைப்படத்தில் ஒரு வேடத்தை ஏற்று நடிக்கிற வேளையில் ஒரு கேரக்டர் உண்டு. அது முக்கியமான கேரக்டர். அது கொள்ளைக்கார பார்த்திபன் கதாபாத்திரம். அதாவது கொள்ளை அடிப்பதே அவருடைய தொழில். அப்படிப்பட்ட கேரக்டரில் நடித்த அந்த கதாநாயகன் நினைவு தான் இன்றைக்கு சேலத்தை சேர்ந்த முதல்-அமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியை பார்க்கிறபோது நமக்கெல்லாம் தோன்றுகிறது.

சேலம் மாவட்ட மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களே முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த ஆட்சியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று. சேலத்தை நான் தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. சேலம் என்றாலே மாம்பழத்திற்கு பெயர்போன ஊர். மாம்பழத்தில் வண்டு துளைத்துவிட்டால் அதை தூக்கி எறிந்துவிடுவோம். அதுபோல், இன்றைக்கு தமிழக அரசியலை துளைத்திருக்கும் வண்டுதான் எடப்பாடி பழனிசாமி என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

அப்படி வண்டு துளைத்திருக்கிற நிலையிலே எடப்பாடி பழனிசாமியையும், அவருடைய ஆட்சியையும் தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பது உங்களுடைய உணர்வின் மூலமாக நான் அறிந்து கொள்கிறேன். எனவே, அ.தி.மு.க. என்கிற கொள்ளையர்களிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டிய, காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தி.மு.க.வுக்கு உண்டு. அதனுடைய தொடக்கமாகத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை தி.மு.க.வின் போராட்டம் தொடரும்.

மத்திய அரசின் எடுபிடி அரசாக மாநில அரசு செயல்படுகிறது. இவர்கள் அடிக்கிற கொள்ளையில் மத்திய பா.ஜனதா அரசுக்கு கமிஷன் கொடுக்கப்படுகிறது. இதை நான் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைக்கிறேன். இது தொடர்பாக என் மீது வழக்கு தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன். அ.தி.மு.க.ஆட்சியை ஏற்படுத்தியவர்கள் நீங்கள். ஆனால் இன்றைக்கு விரக்தியின் விளம்பில் நின்று கொண்டு பல்வேறு வேதனைகளை மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

அ.தி.மு.க. அமைச்சரவையில் முதல்-அமைச்சருடன் சேர்த்து மொத்தம் 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். குட்கா ஊழல் மட்டுமின்றி எல்லா துறைகளிலும் ஊழல் கறைபடிந்திருக்கிற ஒரு அமைச்சரவை இருக்கிறது என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக் கும் இந்த ஆட்சிதான். எதற்கு எடுத்தாலும் ஊழல். இதை பார்த்து தான் ஊழலை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க.சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் தெரிவித்தால், அந்த துறையின் அதிகாரி பாலியல் புகாரில் சிக்கியுள்ள அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி மீது புகார் கொடுக்க காவல்துறையை சேர்ந்த டி.ஜி.பி.யை பார்க்கப்போனால், அந்த டி.ஜி.பி.ராஜேந்திரன் நிலை என்ன என்றால்? அவர் குட்கா ஊழல் காரணமாக சி.பி.ஐ.விசாரணையில் மாட்டிக்கொண்டிருக்கிறார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பலகோடி கொள்ளையடிக்கிறார். அதை விசாரியுங்கள் என்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்க போனால், அவரது நிலை என்னவென்றால், ஒப்பந்த முறைகேட்டில் சிக்கி நீதிமன்றத்தின் முன் நிற்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு அவர் வந்திருக்கிறார்.

அ.தி.மு.க.ஆட்சியின் ஊழல்களை எல்லாம் இங்கே சொல்ல வேண்டும் என்றால் நேரம் போதாது. ரூ.400 கோடி பருப்பு கொள்முதல் ஊழலில் அமைச்சர் காமராஜ் சிக்கி உள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.700 கோடியில் மதிப்பெண் ஊழலில் அமைச்சர் கே.பி.அன்பழகன் சிக்கியிருக்கிறார். 2 ஆயிரம் ஆம்னி பஸ் வாங்கியதில் ரூ.300 கோடி டெண்டர் ஊழலில் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விரைவில் சிக்கபோகிறார். ரூ.1000 கோடிக்கு மேல் முட்டை டெண்டரில் ஊழல், காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல், இதில் ரூ.84 கோடி கொள்ளை, மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வாக்கி டாக்கியில் ஊழல் என்று 33 அமைச்சர்களும் ஊழலில் சிக்கியுள்ளார்கள்.

கடந்த ஜூலை மாதம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரி மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் மூலமாக சோதனை நடைபெற்றது. அதில் முக்கியமாக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை, நாகராஜன் ஆகியோரது வீடுகள், நிறுவனங்களில் நடந்த சோதனையில் கட்டு கட்டாக பணம், 100 கிலோவுக்கு மேல் தங்கம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள். செய்யாதுரை, நாகராஜன் யார்? என்று கேட்டால், வெங்கடாசலபதி என்ற நிறுவனத்தின் பங்குதாரர்கள். வெங்கடாசலபதி நிறுவனம் யாருடையது தெரியுமா? அவர் தான் பி.சுப்பிரமணியம். இவர் யார் என்று கேட்டால், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி. இவர்களது நிறுவனத்திற்கு ரூ.3 ஆயிரத்து 120 கோடிக்கு ஒப்பந்த பணிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.5 லட்சம் தான் வருமானம் என்று ஓ.பன்னீர்செல்வம் தேர்தலின்போது அபிடவிட் தாக்கல் செய்திருந்தார். அவரது குடும்பத்தினர் வாங்கி குவித்துள்ள சொத்துகளை பார்த்தால் மிகப்பெரிய பட்டியல் உள்ளது. அமைச்சர்கள் செய்யும் ஊழலுக்கு சில உயர் அதிகாரிகள் துணை போகிறார்கள். அவர்கள் யார்? யார்? என்று நாங்கள் பட்டியல் எடுத்து ரகசியமாக கண்காணித்து வருகிறோம். ஊழல் பட்டியல் எங்களிடம் வந்துவிட்டது. அமைச்சர்கள் தங்களது பினாமி பெயரில் எவ்வளவு சொத்து வாங்கியிருக்கிறீர்கள். ஆட்சியை காப்பாற்ற ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் பணம் எவ்வளவு கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எந்தெந்த அதிகாரிகள் துணைபோகிறார்கள். அந்த பட்டியலை எல்லாம் நாங்கள் தயாரித்து வைத்துள்ளோம். தி.மு.க.ஆட்சிக்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரன்சி எண்ணியவர்கள் கட்டாயம் கம்பி எண்ணுவார்கள்.

லோக் ஆயுக்தா அமைப்புக்கு இதுவரை தலைவர் நியமிக்கப்படவில்லை. அந்த அமைப்பு தொடங்கப்பட்டு விசாரணை நடத்தினால், முதல்-அமைச்சர், துணை- முதல் அமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் சிக்குவார்கள். சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு பதில் மாற்று வழியை தேடுங்கள் என்று சட்டசபையில் ஏற்கனவே நான் தெரிவித்தேன். விவசாயிகள், குடியிருக்கிற மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றக்கூடாது என்று தொடர்ந்து குரல் கொடுத்தோம். அதைபற்றி எல்லாம் கவலைப்படாமல் ரூ.10 ஆயிரம் கோடி டெண்டரில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்று பேரம் பேசி வருகிறார்கள். எனவே, தமிழகத்தில் நடக்கிற அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்ட அனைவரும் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், முன்னாள் மேயர் ரேகாபிரியதர்ஷினி, வக்கீல் அண்ணாமலை, அயோத்தியாபட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், மாணவரணி செயலாளர் சங்கர், ஊராட்சி செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அம்மாசி, பி.ஏ.முருகேசன், எடப்பாடி நகர செயலாளர் பாஷா, மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கராஜ், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட துணை அமைப் பாளர் தங்கம், மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாச பெருமாள்.

எடப்பாடி ஒன்றிய பொறுப்பாளர் பூவாக்கவுண்டர், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் செல்வி மெஸ் பழனிசாமி, கொங்கணாபுரம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், மாவட்ட தொ.மு.ச.தலைவர் மணி, கன்னங்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவர் குபேந்திரன், அயோத்தியாபட்டணம் பச்சியப்பன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் இளந்திரையன், சேலம் தா.ஆனந்தகண்ணன், ராஜா என்கிற அய்யனார், சேலம் வடக்கு ஒன்றிய செயலாளர் ரெயின்போ நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.சின்னதுரை, குணசேகரன், வக்கீல் மனோகரன், தலைவாசல் ஒன்றிய பொறுப்பாளர் சாத்தப்பாடி மணி, கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், பூம்புகார் சேகர், இளைஞர் அணி சந்திரமோகன், வின்சென்ட் நாகா, ரமேஷ்பாபு, ஓமலூர் வடக்கு ஒன்றிய மீனவர் அணி துணை அமைப்பாளர் எம்.பி.மணி உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

குழந்தைக்கு பெயர் சூட்டிய மு.க.ஸ்டாலின்

முன்னதாக சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்த குறலரசன்-கவிதா தம்பதியினர் தங்களது ஆண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு சேலம் வந்திருந்த தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து அவர்களது குழந்தைக்கு கதிரவன் என மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.


Next Story