மானபங்கம் செய்ததாக புகார் கொடுத்த பெண்ணின் தந்தை அடித்துக் கொலை


மானபங்கம் செய்ததாக புகார் கொடுத்த பெண்ணின் தந்தை அடித்துக் கொலை
x
தினத்தந்தி 19 Sept 2018 4:19 AM IST (Updated: 19 Sept 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

மானபங்கம் செய்ததாக புகார் கொடுத்த பெண்ணின் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாசிக்,

நாசிக் நகர் பகுதியை சேர்ந்தவர் சய்யாத் சயீத். இவர் மாலேகாவில் உள்ள கோல்டன் நகர் பகுதியில் வைத்து கடந்த 2015-ம் ஆண்டு பெண் ஒருவரை மானபங்கம் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சய்யாத் சயீத், தான் மானபங்கம் செய்த பெண்ணின் தந்தையான முகமது நவாப் அலி(வயது55) என்பவரை சந்தித்து, மகள் கொடுத்த வழக்கை அவரிடம் கூறி திரும்ப பெறவேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்.

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அவர், வழக்கை திரும்ப பெற முடியாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இது சய்யாத் சயீத்திற்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியது. முகமது நவாப் அலியை பழிவாங்க திட்டமிட்டார். அதன்படி, சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவரை, சய்யாத் சயீத் தன் கூட்டாளிகளுடன் சென்று வழிமறித்து, உருட்டுக்கட்டைகளால் கடுமையாக தாக்கினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடிக்கொண்டிருந்த முகமது நவாப் அலியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து முகமது நவாப் அலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சய்யாத் சயீத் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story