கணவரை மீட்டு தரக்கோரி இளம்பெண் கலெக்டரிடம் மனு
பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறை அருகே கணவரை மீட்டு தரக்கோரி இளம்பெண் கலெக்டரிடம் மனு அளித்தார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், திருவாலந்துறை அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்த அனிதா (வயது 21) தனது உறவினர்களுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் சாந்தாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில், நான் வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் முத்துராஜாவை (21), கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தேன். இந்த நிலையில்,நாங்கள் இருவரும் கடந்த மாதம் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூர் சென்று தங்கினோம். கடந்த 13-ந்தேதி முத்துராஜா குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருப்பூருக்கு வந்து என்னையும், முத்துராஜாவையும் மிரட்டி ஊருக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் முத்துராஜாவின் கல்வி சான்றிதழ்கள், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். முத்துராஜா என்னை திருமணம் செய்துகொள்வேன் என உறுதியாக இருந்ததால், அவரது வீட்டார் முத்துராஜாவை கைவிட்டு சென்றுவிட்டனர்.
வி.களத்தூர் போலீசார் முன்னிலையில், கடந்த16-ந்தேதி திருவாலந்துறை கோவிலில் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பின்பு வாலிகண்டபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் பதிவு செய்ய வந்தபோது, பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் இல்லாததால் பதிவு செய்ய இயலவில்லை. இதையடுத்து ஊர் திரும்பியபோது வி.களத்தூர் கல்லாறு அருகே ஒரு கும்பல் எங்களை மறித்து கத்தியை காட்டி மிரட்டி எனது கணவர் முத்துராஜாவை கடத்தி சென்று விட்டனர்.
பல இடங்களில் தேடியும், அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. எனது கணவரை மீட்டு தருவதுடன், கடத்தி சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
Related Tags :
Next Story