பாம்பன் கடல் பகுதியை ஹெலிகேமராவில் படம் பிடித்த வாலிபர்கள், போலீசார் விசாரணை


பாம்பன் கடல் பகுதியை ஹெலிகேமராவில் படம் பிடித்த வாலிபர்கள், போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Sep 2018 11:00 PM GMT (Updated: 19 Sep 2018 7:26 PM GMT)

பாம்பன் கடல் பகுதியில் ஹெலிகேமராவை பறக்க விட்டு படம் பிடித்த சென்னையை சேர்ந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்,

தமிழக கடல் பகுதிகளில் ராமேசுவரம் அதிக முக்கியத்தவம் வாய்ந்த பகுதியாகும். இலங்கை கடல் பகுதி அருகாமையில் அமைந்துள்ளதே அதற்கு காரணமாகும். மேலும பாதுகாப்பு கருதி ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் பாலம் மற்றும் தீவு பகுதிகளை ஹெலிகேமரா மூலம் படம் பிடிக்க போலீசாரால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாம்பன் ரெயில்வே பாலம், ரோடு பாலத்தின் மேல் பகுதியில் நேற்று ஹெலிகேமரா மூலம் சில வாலிபர்கள் படம் பிடித்தனர். இதுபற்றி பாம்பன் போலீசாருக்கு தகவல் கிடைத்து. போலீசார் அங்கு சென்று தெற்குவாடி கடற்கரையில் இருந்து ஹெலிகேமரா மூலம் படம் பிடித்து கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் தாய் எங்கள் தமிழ்நாடு என்ற தலைப்பில் ஒரு பாடலுக்கு தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களை ஹெலிகேமரா மூலம் படம் பிடித்து வருவதாகவும், பாம்பன் பகுதியில் ஹெலிகேமரா மூலம் படம் பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முறையாக அனுமதி பெற்று விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டதில் ஹெலிகேமரா மூலம் படம் பிடிக்க அனுமதி பெற்றிருப்பது தெரியவந்தது.

அதன் பின்பு அந்த வாலிபர்கள், தூக்குப்பாலம் வழியாக கப்பல் மற்றும் மீன்பிடி படகுகள் கடந்து சென்றதை ஹெலிகேமரா மூலம் படம் பிடித்தனர்.


Next Story