மண்டபத்தில் அரியவகை பால் உலுவை மீன்கள் பறிமுதல்


மண்டபத்தில் அரியவகை பால் உலுவை மீன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Sept 2018 4:00 AM IST (Updated: 20 Sept 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

மண்டபத்தில் மீனவர்கள் பிடித்து வந்த தடைசெய்யப்பட்ட அரியவகை பால் உலுவை மீன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மீன்பிடி தொழிலில் பிரதானமாக விளங்கி வருகிறது. மீன் பிடிக்க செல்லும் மீனவர்களின் வலையில் கிளி மீன், கிளாத்தி, விளை மீன், பாறை மீன், சீலா, திருக்கை உள்பட பலவகை மீன்கள் கிடைத்து வருகின்றன. அதேவேளையில் கடல்வாழ் உயிரினமான டால்பின், கடல் பசு, பால் சுறா, பால் உலுவை மீன்களை மீனவர்கள் பிடிப்பதற்கு அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மண்டபத்தில் இருந்து மன்னார் வளைகுடா பகுதியில் சுமார் 50–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று காலை கரைதிரும்பினர். இதில் அரசால் தடைசெய்யப்பட்ட அரியவகை பால் உலுவை மீன்களை ஒரு படகில் மீனவர்கள் பிடித்து வந்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து மண்டபம் வனச்சரகர் சதஷ் தலைமையில் வனவர் குணசேகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்றனர். அதிகாரிகள் வருவதை கண்டதும் பெரிய பால் உலுவை மீன் ஒன்றையும், 3 சிறிய பால் உலுவை மீன்களையும் துறைமுக பகுதியிலேயே போட்டு விட்டு அதை பிடித்து வந்த மீனவர்கள் தப்பியோடி விட்டனர். வனத்துறையினர் துறைமுக பகுதியில் கிடந்த 3 அடி நீளம், சுமார் 100 கிலோ எடை கொண்ட பெரிய பால் உலுவை மீன் மற்றும் 3 சிறிய பால் உலுவை மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் தடைசெய்யப்பட்ட பால் உலுவை மீனை பிடித்து வந்த மீனவர்கள் யார் என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, தடைசெய்யப்பட்ட மீன்களான சுறா, பால் சுறா, பால் உலுவை போன்ற மீன்களை மீனவர்கள் யாரும் பிடிக்க வேண்டாம். தடையை மீறி பிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 3 வருட சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும். வலைகளில் இதுபேன்ற மீன்கள் சிக்கினால் தயவு செய்து மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டுவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.


Next Story