மருத்துவக்கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி, 3 பேர் மீது வழக்கு
மருத்துவக்கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவவீரர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி,
சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் தேவராஜ்(வயது 55). இவர் தனது மகனுக்கு மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்க முயற்சி செய்தார். அப்போது காரைக்குடியைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரரும், இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிமான அமலன் என்பவருடன் தேவராஜ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமலன், மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி காரைக்குடியைச் சேர்ந்த அந்தோணி காணிக்கைராஜ் என்பவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதையடுத்து அமலன், அந்தோணி காணிக்கைராஜ் மற்றும் காரைக்குடியை சேர்ந்த சண்முகநாதன் ஆகியோர் மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சத்தை தேவராஜிடம் இருந்து வாங்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியபடி மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து தேவராஜ் கேட்டபோது அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை. இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த தேவராஜ், இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் அமலன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.