விசாரணை என்கிற பெயரில் மயக்க ஊசி போட்டு துன்புறுத்தியதாக வனத்துறையினரை கண்டித்து மலை வாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்


விசாரணை என்கிற பெயரில் மயக்க ஊசி போட்டு துன்புறுத்தியதாக  வனத்துறையினரை கண்டித்து மலை வாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2018 5:00 AM IST (Updated: 20 Sept 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

விசாரணை என்கிற பெயரில் மயக்க ஊசி போட்டு துன்புறுத்தியதாக வனத்துறையினரை கண்டித்து பொள்ளாச்சியில் மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே ஆழியாறு வனப்பகுதியில் காண்டூர் கால்வாயில் சிறுத்தைப்புலி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. மேலும் தலை, பின் பகுதி கால், முன்பகுதி காலின் நகங்கள் இல்லாமல் இருந்தது. இதன் காரணமாக சிறுத்தைப்புலியை மர்ம நபர்கள் வேட்டையாடி கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வனத்துறையினர் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்வதாக மலைவாழ் மக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் விசாரணை என்ற பெயரில் மலைவாழ் மக்களை மயக்க ஊசி போட்டு துன்புறுத்திய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைவாழ் மக்கள் மீதான தாக்குதலை விசாரிக்க தனி விசாரணைக்குழு அமைத்து நியாயம் வழங்கவும், வன உயிரினங்களை வேட்டையாடும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய கோரி பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டில்லிபாபு கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் மலைவாழ் மக்கள் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட சப்–கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக விசாரிக்க கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன், பொள்ளாச்சி சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனை விசாரணை அதிகாரியாக நியமித்துள்ளார். இது குறித்து சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது:–

சிறுத்தை புலி வேட்டையாடியது தொடர்பாக வனத்துறையினர் மலைவாழ் மக்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வனத்துறையினர் தாக்கியதாகவும், மயக்க ஊசி செலுத்தியதாக புகார் கூறப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வருகிற 26–ந்தேதி காலை 11 மணிக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது. மலைவாழ் மக்கள், வனத்துறையினரை அழைத்து தனி, தனியாக விசாரணை நடத்தப்படும். மேலும் புகார் தெரிவித்த மலைவாழ் மக்களிடம் மருத்துவ பரிசோதனை அறிக்கை மற்றும் உரிய ஆவணங்கள் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் மருத்துவ அறிக்கை கொடுத்த டாக்டரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும். இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி கோவை மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர்கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார். வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

சிறுத்தைப்புலி வேட்டையாடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டப்படி சந்தேகத்தின் பேரில் யாரை வேண்டுமானாலும் அழைத்து விசாரணை நடத்தலாம். விசாரணைக்கு அழைத்து சென்ற மலைவாழ் மக்கள் யாரையும் துன்புறுத்தவோ, அடிக்கவோ இல்லை. சிறுத்தைப்புலி வேட்டையாடிய சம்பவத்தில் தொடர்புடையவர்களை காப்பாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகிறது. சப்–கலெக்டர் தலைமையில் நடைபெறும் விசாரணையில் போதிய ஆதாரங்களை கொடுப்போம். சிறுத்தை புலியை வேட்டையாடிய நபர்கள் தொடர்பாகவும் முக்கிய தடயங்கள் கிடைத்து உள்ளது. எனவே வேட்டையாடிய நபர்களை பிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story