கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி - கலெக்டர் ரோகிணி தகவல்


கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி - கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 19 Sep 2018 11:04 PM GMT (Updated: 19 Sep 2018 11:04 PM GMT)

சேலம் கோ-ஆப்டெக்ஸில் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது என கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம்,

சேலம் டவுனில் உள்ள சேலம் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:- தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையாக கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தில் வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை மதிப்புள்ள காஞ்சிபுரம் பட்டு புடவைகள், ஆரணி பட்டு புடவைகள், ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலான புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டுப்புடவைகள் உள்ளன.

கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும், ஆர்கானிக் மற்றும் களங்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் ஆடைகளை வாங்கி கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் வந்தனா கார்க், சேலம் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் வெற்றிவேல், சேலம் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலைய முதுநிலை விற்பனை மேலாளர் எஸ்.விஜய சாமூண்டீஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story