பி.டி.ஆர். வாய்க்காலில் வீணாகும் தண்ணீர்: விவசாயிகள் குற்றச்சாட்டு


பி.டி.ஆர். வாய்க்காலில் வீணாகும் தண்ணீர்: விவசாயிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 20 Sep 2018 9:30 PM GMT (Updated: 20 Sep 2018 5:09 PM GMT)

பி.டி.ஆர். வாய்க்காலில் கடந்த மாதம் திறந்துவிட்ட தண்ணீர் இன்னும் கண்மாய்களுக்கு முழுமையாக வந்து சேரவில்லை என்றும், பி.டி.ஆர். வாய்க்காலில் தண்ணீர் வீணாகி வருவதாகவும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு குறைகள், கோரிக்கைகள், பிரச்சினைகள் குறித்து பேசினர். விவசாயிகள் பேசும் போது கூறியதாவது:-

மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றியும், துரிதமாகவும் அகற்ற வேண்டும். மாவட்ட வன அலுவலரால் சுமார் 600 மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் கம்பம் மேற்கு வனப்பகுதியில் வழங்கப்படாமல் உள்ளது. அங்கும் அனுமதிச்சீட்டு வழங்க வேண்டும்.

கொடுவிலார்பட்டி அருகே கோபாலபுரம் பகுதியில் வைகை ஆற்றில் மணல் அள்ளுவது தொடர்ந்து நடக்கிறது. ஊரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்தாலே மணல் அள்ளும் கும்பலை பிடித்து விடலாம். ஆனால், போலீசார் மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் செயல்படுகின்றனர். அதே நேரத்தில் விவசாயிகள் சரக்கு வாகனங்களில் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் போது அதிக பாரம் என்று கூறி போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

பி.டி.ஆர்.-தந்தை பெரியார் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், கடந்த மாதம் 22-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையிலும் இன்னும் காமாட்சிபுரம் பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. காற்றாலை அமைக்க வாய்க்காலில் மண்ணை கொட்டி பாதை அமைத்தனர். பின்னர் அந்த மண் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது. மேலும் தனியார் சிலர் தோட்டங்களுக்கு குழாய்கள் செல்வதற்காக வாய்க்காலை உடைத்துள்ளனர். இதனால் பி.டி.ஆர்.வாய்க்காலில் தண்ணீர் வீணாகிறது. அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வது கூட கிடையாது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.12 கோடி செலவில் பி.டி.ஆர். வாய்க்காலை புனரமைக்க மேற்கொண்ட திட்டத்துக்கு விரைவில் அனுமதி பெற்று பணிகளை தொடங்க வேண்டும்.

சாக்குலூத்து மெட்டு சாலை அமைப்பதற்கு நிலம் அளவீடு பணிகளுக்கு விரைவில் அனுமதி பெற வேண்டும். இந்த சாலை அமைக்கும் பணியை விரைவில் மேற்கொள்ள வேண்டும். தென்னையில் இருந்து நீரா பானம் தயாரிக்கும் திட்டத்துக்கு தேனி மாவட்டத்தில் எந்த அதிகாரியை தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை. இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீரா பானம் தயாரிக்க அனுமதியும் வழங்க வேண்டும். புதிதாக தென்னங்கன்றுகள் நடுவதற்கு அதிக செலவு ஆகிறது. அரசு இலவசமாக கன்றுகள் வழங்க வேண்டும். வைகை அணையை தூர்வார வேண்டும். அணையில் அதிக அளவில் மண் உள்ளதால் அனைத்து விவசாயிகளும் நேரில் வந்து அள்ளிச் செல்ல முடியாது. எனவே, அணையை தூர்வாரி ஒவ்வொரு கிராமத்திலும் காலி இடங்களில் வண்டல் மண்ணை கொட்டி வைத்தால் அந்தந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அவற்றை பயன்படுத்திக் கொள்வார்கள்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர் கலெக்டர் பல்லவி பல்தேவ் பேசியதாவது:-

விவசாயிகள் கூறிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பி.டி.ஆர். வாய்க்காலில் விவசாயிகள் தெரிவிக்கும் புகார்கள் தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்குலூத்து மெட்டு சாலை அமைக்கும் திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. வனத்துறையின் அனுமதியும் விரைவில் பெறப்படும். தென்னையில் இருந்து நீரா பானம் எடுப்பது தொடர்பாக வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விவசாயிகளுக்கு மானிய விலையில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றை நடுவதற்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.

வைகை அணையை தூர்வாருவதற்கு ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளே அணையில் உள்ள மண்ணை எடுத்துக் கொள்ள முடியும் என்றால் அதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகளை அரசுக்கு பரிந்துரையாக அனுப்பி வைக்கப்படும். பெரியகுளம் பகுதியில் மாம்பழங்களை இருப்பு வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைப்பதற்கு 2½ ஏக்கர் இடம் தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும். அதேபோல், மாவட்டத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான திட்டமும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் விவசாயிகள் சிலர், கூடலூர் அருகே சுரங்கனார் நீர்வீழ்ச்சி பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு மாவட்ட வன அலுவலர் கவுதம் பதில் அளிக்கையில், ‘தடுப்பணை கட்டுவது தொடர்பாக திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான பணிகள் நடக்கும்’ என்றார். 

Next Story