தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 2 ஏக்கரில் சமுதாய காடு வளர்ப்பு திட்டம்


தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 2 ஏக்கரில் சமுதாய காடு வளர்ப்பு திட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2018 10:15 PM GMT (Updated: 2018-09-20T23:10:07+05:30)

தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 2 ஏக்கரில் சமுதாய காடு வளர்ப்பு திட்டத்தை புதிதாக பதவி ஏற்ற முதல்வர் குமுதா லிங்கராஜ் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வராக இருந்த டாக்டர் இளங்கோவன் ஓய்வு பெற்று விட்டார். இதையடுத்து புதிய முதல்வராக சென்னை ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறைத்தலைவர் டாக்டர் குமுதாலிங்கராஜ் நியமிக்கப்பட்டார். அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

சென்னையை சேர்ந்த இவர் சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பையும், எம்.டி. படிப்பை 2003-ம் ஆண்டு தஞ்சை மருத்துவக்கல்லூரியிலும் பயின்றார். தற்போது 15 ஆண்டுகளுக்குப்பின்னர் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார்.

புதிதாக பதவி ஏற்றுள்ள டாக்டர் குமுதாலிங்கராஜ், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தை பசுமையாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவருடைய புதிய முயற்சியாக 2 ஏக்கர் பரப்பளவில் சமுதாய காடு வளர்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் நேற்று மரக்கன்றுகளை நட்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது துணை முதல்வர் ரவிக்குமார், கண்காணிப்பாளர் பாரதி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், மயக்கவியல் துறை பேராசிரியர் சாந்திபால்ராஜ், டாக்டர் சின்னதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.

இது குறித்து முதல்வர் குமுதாலிங்கராஜ் கூறுகையில், “தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும். தற்போது தஞ்சை மருத்துவக்கல்லூரி வளாகத்தை பசுமையாக மாற்றும் வகையில் 2 ஏக்கர் பரப்பளவில் சமுதாய காடு வளர்க்கப்படுகிறது. இதில் புங்கை மரம், வாகை மரம், அரசமரம், ஆலமரம் உள்ளிட்ட 17 வகையான மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இங்கு மொத்தம் 400 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதனை பராமரிக்க தனியாக ஆட்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்”என்றார்.

Next Story