பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்


பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 20 Sep 2018 11:15 PM GMT (Updated: 20 Sep 2018 5:53 PM GMT)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நாகர்கோவிலில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் நாளை (சனிக்கிழமை) மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

அன்றைய தினம் மாணவர்களின் போக்குவரத்து நலன் கருதி 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நடைபெற இருந்த காலாண்டு தேர்வு, தேர்வு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளி திறக்கும் நாளான அக்டோபர் மாதம் 3-ந் தேதி நடைபெறும். எனவே நாளை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜாண் ஒய்ஸ்லின்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். எனவே பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் வழியாக தக்கலை, இரணியல், மார்த்தாண்டம், திருவனந்தபுரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஆரல்வாய்மொழியில் இருந்து செண்பகராமன்புதூர், துவரங்காடு சந்திப்பு, திட்டுவிளை வழியாக செல்ல வேண்டும். திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருநெல்வேலி செல்லும் வாகனங்கள் தோட்டியோடு, களியங்காடு வழியாக இறச்சகுளம், துவரங்காடு, செண்பகராமன்புதூர் வழியாக ஆரல்வாய்மொழி சென்று திருநெல்வேலி செல்ல வேண்டும்.

அஞ்சுகிராமம் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வரும் வாகனங்கள் வழுக்கம்பாறை, ஈத்தங்காடு வழியாக மணக்குடி, புத்தளம் சென்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஈத்தாமொழி மார்க்கமாக நாகர்கோவில் வரவேண்டும்.

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் மார்க்கமாக கன்னியாகுமரி செல்லும் வாகனங்கள் தோட்டியோடு வழியாக இரணியல் ரோடு சென்று மடவிளாகம், ராஜாக்கமங்கலம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக கன்னியாகுமரி செல்ல வேண்டும். போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story