பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை


பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Sept 2018 3:00 AM IST (Updated: 21 Sept 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கோத்தகிரி,


கோத்தகிரி பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சி வளாகத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு குழுவின் துணைத் தலைவர் ராஜன், சுகாதார ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் செயல் அலுவலர் குணசேகரன் பேசும் போது, நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. எனவே கோத்தகிரி பகுதியில் பிளாஸ் டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அபராதத்தொகை வசூலிக்கப்படும்.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படும். இதே போல திருமண மண்டப உரிமையாளர்கள் தங்களது வளாகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள், மறு முறை பயன்படுத்த முடியாத தண்ணீர் கப்புகள், குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கையுறைகள் போன்றவற்றை பயன்படுத்தினால் மண்டப உரிமையாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இது மட்டுமின்றி மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட 19 இனங்களை சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் பிளாஸ்டிக் சில்லறை விற்பனையாளர்களுக்கு ½ கிலோவிற்கு ரூ.1000-ம், மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம், திருமண மண்டபங்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ குற்றம் என்பதால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். இதில், வியாபாரிகள், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள், பொது நிறுவனங்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் தலைமை எழுத்தர் நாகராஜன் நன்றி கூறினார். 

Next Story