நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Sep 2018 9:45 PM GMT (Updated: 20 Sep 2018 8:30 PM GMT)

கோவையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாநகராட்சி தனி அதிகாரியிடம் நா.கார்த்திக் எம்.எல்.ஏ மனு அளித்தார்.

கோவை,


கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் நேற்றுக்காலை கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயனை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கோவை சிங்காநல்லூர் தொகுதி உள்பட மாநகரின் பல்வேறு இடங்களில் 12 நாள், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருவதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அணைகளில் போதிய குடிநீர் இருந்தபோதிலும் அதை எடுத்து வினியோகிப்பதில் உள்ள குளறுபடிகளினால் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதனால் குடிப்பதற்கு கூட குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் சம்பந்தமாக மாநகரின் அனைத்து தரப்பினரையும் அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தவேண்டும். தெரு மின்விளக்குகள், சூரிய ஒளி மின்விளக்குகள் பராமரிப்பின்மையால் எரியாமல் உள்ளன. அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

சாக்கடைகள், மழைநீர் வடிகால்கள் சரிவர அள்ளாமல், தூர்வாராமல் இருப்பதாலும், குப்பைகளை அள்ளாததால் மலைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும். சாலைகள் பல ஆண்டுகளாக செப்பனிடப்படாமலும், புதிய தார்சாலைகள் அமைக்காததாலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். எனவே உடனடியாக சாலைகளை சரிசெய்ய வேண்டும். எனவே இந்த கோரிக்கைகளை விரைவில் செய்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, மெட்டல் எம்.மணி, நந்தகுமார், உமாமகேஸ்வரி உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story