பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் நிலையை மாணவர்கள் மாற்ற வேண்டும்


பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் நிலையை மாணவர்கள் மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 20 Sep 2018 11:44 PM GMT (Updated: 20 Sep 2018 11:44 PM GMT)

பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் நிலையை மாணவர்கள் மாற்ற வேண்டும் என்று மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிபதி சத்யதாரா பேசினார்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சட்ட உதவிகள் குழுமத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்கள் பழனிச்சாமி, உமாமகேஸ்வரி, வின்சென்ட் ஆகியோர் பேசினர். விழாவில் மாவட்ட குற்றவியல் முதன்மை நீதிபதி சத்யதாரா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மாணவர்கள் மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். நல்ல நட்புடன் இருக்க வேண்டும். தீய எண்ணம் கொண்டவர்களையும் நல்லவர்களாக மாற்ற முயற்சிக்க வேண்டும். இப்படி நடந்து கொண்டாலே எவ்வித பிரச்சினைகளும் வராது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். முதுமை காலத்தில் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் நிலையை மாற்ற வேண்டும். அதற்கு பெற்றோர்களிடத்தில் அன்புடன் நடக்க வேண்டும்.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் கூறும் அறிவுரையை, மாணவர்கள் கேட்டு நடக்க வேண்டும். படித்து முடித்தவுடன் ஒவ்வொருவரும் வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு சுய வருமானத்தைப் பெறும் நிலை வந்தால் தான் வாழ்க்கை சிறப்பாக அமையும். அரசு பள்ளியில் படித்தவர்கள் பெரும்பாலானோர் அறிஞர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், சிறந்த தலைவர்களாகவும் உருவாகியுள்ளனர் என்பதை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு கல்லை சிலையாக செதுக்கும் சிற்பி போல மாணவர்களிடத்தில் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஆசிரியர்கள் கடும் முயற்சி எடுக்கும் போது அதை தண்டனையாக, அவமானமாக மாணவர்கள் கருதக்கூடாது. சிவில் மற்றும் கிரிமினல் சட்ட விதிகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாலை விதிகளை மதித்து நடந்தால் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். செல்போனில் வரும் தேவையற்ற தகவல்களை தவிர்த்து நல்லவற்றை மட்டுமே மாணவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் கேட்ட சட்டம் சம்பந்தமான கேள்விகளுக்கு எளிய முறையில் நீதிபதி பதில் அளித்தார். முடிவில் சட்ட உதவி மைய பொறுப்பாளர் எபினேசர் இம்மானுவேல் நன்றி கூறினார்.

Next Story