எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்


எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம்
x
தினத்தந்தி 21 Sept 2018 5:22 AM IST (Updated: 21 Sept 2018 5:22 AM IST)
t-max-icont-min-icon

மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டை கண்டித்து எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்டு காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.

பெங்களூரு,

போராட்டத்தின் போது அங்கு வந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

அகில இந்திய காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு மருத்துவ கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் ரூ.600 கோடி ஹவாலா பணத்தை அனுப்பியதாக பா.ஜனதா நேற்று முன்தினம் டெல்லியில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியது. டி.கே.சிவக்குமாரின் நண்பர்களே இதை வாக்குமூலமாக கூறி இருப்பதாகவும் பா.ஜனதா கூறியது.

இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த டி.கே.சிவக்குமார், எந்த விசாரணைக்கும் தயார் என்றும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறினார். தான் சிறைக்கு சென்றாலும், கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பா.ஜனதா கூறிய குற்றச்சாட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் விஸ்வநாத், ரேணுகாச்சார்யா மற்றும் ரவிக்குமார் எம்.எல்.சி. ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் மூன்று பேரும், போராட்டக்காரர்களின் பிடியில் சிக்கினர்.

இதனால் அங்கு அவர்களுக்குள் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டக்காரர்களின் பிடியில் இருந்து வெளியே வர அவர்களுக்கு சிறிது நேரம் ஆனது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து ரேணுகாச்சார்யா நிருபர்களிடம் கூறுகையில், “காங்கிரசார் அடாவடியில் ஈடுபடுகிறார்கள். கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியான நிலையில் இருக்கிறதா?. எதிர்க்கட்சி தலைவரின் வீட்டில் காங்கிரசார் நுழைந்து அத்துமீறி இருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது” என்றார்.

Next Story