கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவிகளுக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி


கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் மாணவிகளுக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி
x
தினத்தந்தி 21 Sep 2018 12:12 AM GMT (Updated: 21 Sep 2018 12:12 AM GMT)

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், அரசு மகளிர் கலைக் கல்லூரி மாணவிகளுக்கு 3 நாள் குறுகிய கால கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில், கடந்த 18-ந் தேதி முதல் நேற்று வரையில் 3 நாட்கள் பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த தமிழ்த்துறை மாணவிகளுக்கு குறுகியகால கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், ஒரு பகுதியின் வரலாற்றை எழுத ஆதாரங்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும், அந்த ஆதாரங்களில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் கல்வெட்டுக்களை கொண்டு வரலாறு எவ்வாறு எழுதப்படுகிறது, புதிய கண்டுபிடிப்புக்களின் முக்கியத்துவம், அவற்றை பாதுகாக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தார்.

மேலும், ‘தமிழி‘ என்றழைக்கப்படும் தொல் தமிழ் வரி வடிவ எழுத்துக்களை எழுத, படிக்க பயிற்சி அளித்து அத்தமிழி எழுத்திலிருந்து ஒவ்வொரு நூற்றாண்டாக எவ்வாறு எழுத்துக்கள் மாற்றமடைந்து வந்து தற்போதைய தமிழ் எழுத்துக்களாக ஆனது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கினார்.

பின்னர் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள பதினோராம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால சோழர் கால கல்வெட்டை மை ஒற்றி படியெடுத்து அக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை படித்து அவற்றின் பொருளை அறிந்து கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பெற்ற 50 மாணவிகளுக்கு, கலெக்டர் பிரபாகர் சான்றிதழ் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சிய பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story