பாளையங்கோட்டையில் சிறை கைதிகள் நடத்துவதற்காக ரூ.2½ கோடியில் பெட்ரோல் பங்க் டி.ஐ.ஜி. பழனி அடிக்கல் நாட்டினார்
பாளையங்கோட்டையில் சிறை கைதிகள் நடத்துவதற்காக ரூ.2½ கோடியில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட உள்ளது.
நெல்லை,
பாளையங்கோட்டையில் சிறை கைதிகள் நடத்துவதற்காக ரூ.2½ கோடியில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல்லை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி நாட்டினார்.
பெட்ரோல் பங்க்பாளையங்கோட்டை சிறையில் தூக்குத்தண்டனை கைதி, ஆயுள் தண்டனை கைதி, விசாரணை கைதி, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கைதிகள் என 1,212 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்குள்ள தண்டனை கைதிகள் விவசாயம் செய்தல், புத்தகம் தயாரித்தல், சிமெண்டு செங்கல் தயாரித்தல் உள்ளிட்ட பல வேலைகளை செய்து வருகிறார்கள். மேலும் உணவகமும் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள 35 நன்னடத்தை கைதிகளை கொண்டு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உதவியுடன் பெட்ரோல் பங்க் நடத்த சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
டி.ஐ.ஜி. அடிக்கல் நாட்டினார்இதற்காக பாளையங்கோட்டை சிறைக்கு எதிரே உள்ள சூப்பிரண்டு பங்களா அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அங்கு ரூ.2½ கோடி மதிப்பில் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடந்தது. மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி அடிக்கல் நாட்டி வைத்தார். தொடர்ந்து பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார், உதவி ஜெயிலர் பெருமாள், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மதுரை மண்டல முதுநிலை விற்பனை மேலாளர் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
5 இடங்களில்...பின்னர் சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி நிருபர்களிடம் கூறியதாவது:–
சிறைத்துறை நிர்வாகம் கைதிகளின் நல்வாழ்வுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. பாளையங்கோட்டை சிறையில் உள்ள 35 நன்னடத்தை கைதிகளை கொண்டு பெட்ரோல் பங்க் நடத்தப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்து உள்ளது. இந்த பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி 100 நாட்களுக்குள் முடிவடைந்து விடும்.
கைதிகள் பார்க்கின்ற வேலைக்கு அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். மேலும் பெட்ரோல் பங்க் மூலம் கிடைக்கும் லாபத்திலும் கைதிகளுக்கு பங்கு வழங்கப்படும். தமிழ்நாட்டில் முதல்கட்டமாக பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, வேலூர், சென்னை, கோவை ஆகிய 5 இடங்களில் சிறை நிர்வாகத்தின் சார்பில் கைதிகள் மூலம் பெட்ரோல் பங்க் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.