ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த கமிட்டி இன்று தூத்துக்குடி வருகை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த கமிட்டி இன்று தூத்துக்குடி வருகை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 22 Sept 2018 3:00 AM IST (Updated: 21 Sept 2018 8:47 PM IST)
t-max-icont-min-icon

தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த கமிட்டி இன்று(சனிக்கிழமை) தூத்துக்குடி வருகை தருவதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்துவதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த கமிட்டி இன்று(சனிக்கிழமை) தூத்துக்குடி வருகை தருவதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

ஸ்டெர்லைட் ஆலை 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தமிழ்நாடு அரசின் ஆணைப்படி மூடப்பட்டு உள்ளது. தொடர்ந்து அரசு உத்தரவுப்படி உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு ஆலையில் உள்ள ரசாயனங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் அமிலங்கள், பெட்ரோலிய பொருட்கள் அகற்றும் பணி 2–7–18 அன்று தொடங்கியது. இதில் கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஹைட்ரோ புரோபைல் ஆல்கஹால், பெட்ரோலியம் பொருட்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இந்த ரசாயன பொருட்கள் ஆகஸ்ட் மாதம் 10–ந் தேதி வரை சுமார் 90 சதவீதம் அகற்றப்பட்டு உள்ளன. தாமிரதாது, ஜிப்சம், ராக்பாஸ்பேட் மட்டும் அதிக அளவில் உள்ளன.

இதனால் முழுமையாக அகற்றப்படவில்லை. அதன்பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் பேரில் ரசாயன பொருட்கள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. 30–8–18 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மற்றொரு உத்தரவில், கமிட்டியின் மேற்பார்வையில் ரசாயன பொருட்களை அகற்றலாம் என்ற உத்தரவு வந்தது.

தாமிர தாது 

தற்போது ஆலையில் உள்ள அனைத்து அமிலங்களும் முழுமையாக அகற்றப்பட்டு உள்ளன. ராக்பாஸ்பேட், தாமிரதாது, ஜிப்சம் ஆகியவை உள்ளன. இதில் தாமிரதாது 90 ஆயிரம் டன் உள்ளது. இந்த தாதுவில் 30 சதவீதம் கந்தகம் இருக்கும். இதில் 10 சதவீதம் ஈரப்பதம் பராமரிக்கப்பட வேண்டும். இந்த ஈரப்பதம் குறைந்தால், தாமிரதாது தீப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தாமிரதாதுவை அகற்ற முடிவு செய்தனர்.

தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தாமிரதாதுவை அகற்றுவதற்கான அனுமதி கொடுக்கலாம் என்று உத்தரவு வந்தது. அதன்படி தாமிர தாதுவை அகற்றுவதற்கு ஆலை நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்படும். நாளை(அதாவது இன்று) முதல் தாமிரதாது அகற்றும் பணி தொடங்கும். அதே போன்று ஜிப்சம் 4 லட்சம் டன் உள்ளது. இந்த பொருட்களையும் அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரதாது முதல்கட்டமாக உடனடியாக அகற்றப்படும். தாமிரதாது வாங்கியவர்களிடமோ, தாமிர தாதுவை பயன்படுத்தும் வேறு நிறுவனத்திடமோ கொடுக்கப்படும்.

கமிட்டி இன்று வருகை 

தமிழக அரசின் நோக்கம் 100 சதவீதம் அந்த ஆலையை நடத்தக்கூடாது என்பதுதான். பாதுகாப்பு அடிப்படையில் அங்கு இருந்து பொருட்கள் அகற்றப்பட்டன. தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உள்ள கமிட்டி இன்று(சனிக்கிழமை) தூத்துக்குடிக்கு வருகிறது. ஆனால் முழுவிவரங்கள் இதுவரை தெரியவில்லை.

ரூ.29 கோடி

ஸ்டெர்லைட் நிர்வாகம் டெபாசிட் செய்த ரூ.100 கோடி பணத்தில் கிடைத்த வட்டி ரூ.20 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது ரூ.29 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி உள்ள கிராமங்களுக்கான குடிநீர் திட்டம், கோரம்பள்ளம் குளம் தூர்வாரும் பணி, உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டங்களுக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story