மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட கோரி டிசம்பர் 7-ந்தேதி வேலை நிறுத்தம்


மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட கோரி டிசம்பர் 7-ந்தேதி வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 22 Sept 2018 3:45 AM IST (Updated: 21 Sept 2018 10:34 PM IST)
t-max-icont-min-icon

மின்சார சட்டத்திருத்த மசோதாவை கைவிட கோரி டிசம்பர் 7-ந்தேதி வேலை நிறுத்தம் செய்வது என்று மின் ஊழியர் மத்திய அமைப்பின் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரதராஜன்பேட்டை,

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு.) அரியலூர் கோட்ட பேரவை கூட்டம் ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் சார்லஸ் அறிக்கை வாசித்தார். மாவட்ட செயலாளர் அழகர்சாமி தொடக்க உரையாற்றினார்.

கூட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு பிரிவு அலுவலகங்களில் வருகை பதிவேடு பராமரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பகுதிநேர துப்புரவு ஊழியர் இல்லாத அலுவலகத்தில் காலி யிடங்களை நிரப்பிட வேண்டும். தடையில்லா மின்சாரம் வினியோகிக்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு ரூ.380 தினக்கூலி வழங்கவேண்டும். மின் நுகர்வோர்களின் சேவைகளை தொடர்ந்திட அரியலூர் கோட்டத்தை அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் கோட்டங்களாக பிரிக்கவேண்டும்.

கம்பியாளர்களையும், கள உதவியாளர்களையும் புதிய மின்பாதை நீட்டிப்பு பணி செய்ய நிர்ப்பந்திப்பதை கைவிடவேண்டும். மின்சார சட்டத்திருத்த மசோதா 2014-ஐ சட்டமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் மாதம் 7-ந் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் செய்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வட்ட தலைவர் சரவணன், வட்ட பொருளாளர் செல்வகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத் தலைவர் அகஸ்டின் நிறைவுரை நிகழ்த்தினார். முடிவில் ராஜா நன்றி கூறினார்.

Next Story