காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2018 4:15 AM IST (Updated: 21 Sept 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடந்தது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தாம்பரம் நகராட்சி, பல்லாவரம் நகராட்சி, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம், சேலையூர், திருவஞ்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெள்ளத்தடுப்பு நடவடிக்கைள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த கால வெள்ள பாதிப்புகளின் அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவிற்கிணங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம், குன்றத்தூர்், கம்பராஜபுரம், அமுதம் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்வாய்கள், கழிவுநீர் ஓடைகள், உபரிநீர் கால்வாய்கள் தூர்வரப்பட்டுள்ளன. மேலும் ஏரிகள் தூர்வாரப்பட்டு, கரைகள் பலப்படுத்தப்பட்டு, புதிதாக உபரி நீர் போக்கிகள், மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. பழைய மதகுகள் சீரமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தெரிவித்துள்ளபடி, சில பகுதிகளில் முடிவுறாமல் இருக்கும் சில பணிகளையும் மழை காலத்திற்கு முன்பாக விரைந்து முடிக்கப்படும். நிலுவையில் உள்ள வெள்ள பாதிப்பு தடுப்பு தொடர்பான அனைத்து பணிகளும் விரைந்து போர்க்கால அடிப்படையில் முடிக்கப்படும்.

கழிவு நீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்பு, அந்த பகுதி மக்கள் தான், குப்பையை கொட்டுவதால் அவ்வப்போது ஏற்படுகிறது. இதனை பொதுமக்கள் உணர்ந்து குப்பை கொட்டாமல், அடைப்பு ஏற்படமால் பார்்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் பேசிய மாவட்ட கலெக்டர், மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்்புகளை தடுப்பதற்கு மாவட்ட அளவில் நகராட்சி ஆணையர்கள், பேருராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள் தலைமையில் 11 துறை அலுவலர்கள் அடங்கிய 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வட்டத்திற்கு ஒரு துணை கலெக்டர் தலைமையில் மேற்படி குழுக்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கையாக மீட்பு வாகனங்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், பொக்லைன் எந்திரங்கள், ஜெனரேட்டர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதை தேவையான அளவில் உள்ளதா? என்பதை அலுவலர்கள் நேரடியாக பார்வையிட்டு, இருப்பு நிலவரத்தை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

நிவாரண முகாம்கள் மற்றும் புயல் பாதுகாப்பு மையங்களுக்கு நேரடியாக சென்று அங்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளனவா என்பதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் பொது வினியோக திட்டத்தில் தேவையான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் இருப்பு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கவும், அத்தியாசிய மருந்து பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

போக்குவரத்தை சரிசெய்ய காவல் துறையினர் தயார்நிலையில் இருக்க வேண்டும். மின்சார துறையினர் மின்வழி தடங்களை சரிபார்த்து, பழுதான மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும். தீயணைப்பு துறையினர் உயிர் பாதுகாப்பு உடைகளுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் மீட்பதற்கு தேவையான தளவாடங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் பேரிடர் மீட்பு திட்டம் தயாரித்து மாவட்ட கலெக்டருக்கு 10 தினங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பள்ளி கல்லூரி அளவில் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைத்து பேரிடர் மீட்பு ஒத்திகை நடத்தப்பட வேண்டும் பருவமழையின் போது மாவட்டத்தில் உள்ள அனைத்து தன்னார்வலர்களும் தனியார் நிறுவனங்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி நூர்முகமது, மாவட்ட வனபாதுகாப்பு அலுவலர் போலே சச்சின் துக்காராம், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன். வருவாய் ஆர்.டி.ஓ.க்கள் ராஜூ டி.முத்துவடிவேல், டி.மாலதி, எஸ்.சந்திரசேரகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன்், மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சையது முகமதுஷா, நகராட்சி ஆணையர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story