வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட 6 பேர் பணி இடைநீக்கம்


வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட 6 பேர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 22 Sept 2018 3:15 AM IST (Updated: 22 Sept 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட 6 பேரை பணி இடைநீக்கம் செய்து விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், 


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இளங்காடு கிராமத்தில் 1.9 கி.மீ தூரத்திற்கு தார் சாலை அமைக்க ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மொத்த தூரத்தில் 1.2 கி.மீ தூரம் வரை மட்டுமே தார் சாலை போடப்பட்டுள்ளது. மீதமுள்ள தூரத்திற்கு சாலையை போடாமல் விட்டுள்ளனர்.

ஆனால் ஒன்றிய பொறியாளர் அறிவொளி இந்த சாலை முழுமையாக போடப்பட்டதாகக்கூறி ரசீது தயார் செய்து பணத்தை முறைகேடாக பெற்றுக்கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதேபோல் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் ஒன்றிய பொறியாளர் பாஸ்கரன், பணி மேற்பார்வையாளர் பிருந்தா ஆகியோர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மனித சக்திகளை பயன்படுத்தாமல் பொக்லைன் எந்திரத்தின் மூலம் பணிகளை முடித்துவிட்டு பயனாளிகளின் பணத்தை முறைகேடு செய்தாகவும், வல்லம் ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், ஒன்றிய பொறியாளர் செல்வம், பணி மேற்பார்வையாளர் காயத்திரி ஆகியோர் அரசு தொகுப்பு வீடு கட்டும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து பாஸ்கரன், பிருந்தா, சுப்பிரமணியன், செல்வம், காயத்திரி ஆகியோரையும் பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். 

Next Story