டி.டி.வி. தினகரனுக்கு மக்களை பற்றி எதுவும் தெரியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


டி.டி.வி. தினகரனுக்கு மக்களை பற்றி எதுவும் தெரியாது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 22 Sep 2018 12:00 AM GMT (Updated: 21 Sep 2018 7:29 PM GMT)

தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த டி.டி.வி.தினகரனுக்கு மக்களை பற்றி எதுவும் தெரியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை,

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தனக்கன்குளம், நிலையூர், சூரக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு 397 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருப்பரங்குன்றம் தொகுதியில் அடிப்படை வசதிகள் உள்பட அனைத்து பணிகளும் நிறைவேற்றி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மக்கள் நலன் கருதி தான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சட்டத்தை மதிக்காமல், மக்களுக்காக பணியாற்றும் பிரதிநிதி என்பதை மறந்து பொது இடங்களில் எப்படி பேச வேண்டும் என்பதை அறியாமல் பேசி உள்ளார். அவரின் தவறை அவரே புரிந்து கொள்வார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும்.

பா.ஜ.க. மத்தியில் சிறந்த முறையில் ஆட்சி செய்து வருகிறது, எனவே அனைத்து மாநிலங்களிலும் அவர்கள் ஆளுமையின் கீழ் கொண்டு வர நினைக்கின்றனர், அவர்களுக்கு மக்கள் தான், தகுந்த தீர்வு தருவார்கள். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடங்க மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். எச்.ராஜா மீது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது.

தமிழகத்தில் மக்களுக்கான அரசு நடக்கவில்லை. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கான ஆட்சியாக உள்ளது என்று டி.டி.வி. தினகரன் கூறி வருகிறார். 10 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த டி.டி.வி.தினகரனுக்கு மக்களை பற்றி எதுவும் தெரியாது. இப்போது தான் மக்களை பற்றி படித்து வருகிறார். முழுமையாக படித்து வெற்றி பெற்ற பின்னர் அவரை, அரசியலில் எதிர்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story