மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்


மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 21 Sep 2018 10:30 PM GMT (Updated: 21 Sep 2018 8:06 PM GMT)

மூலனூர் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

மூலனூர்,

மூலனூர் அருகே அமராவதி ஆற்றில் தொடர்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது. இது தொடர்பாக மூலனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வருவாய்த்துறையினர் புகார் கொடுத்து வருகிறார்கள். இதையடுத்து அதிகாரிகளும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் லாரிகள், டிராக்டர்கள் மற்றும் இதர வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனாலும் மணல் கடத்தல் நின்றபாடில்லை.

இந்த நிலையில் மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புஞ்சைதலையூர் எடைக்காடு பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் இருந்து இரண்டு லாரிகளில் மணல் கடத்தி செல்வதாக மூவேந்தர்நகர் பொதுமக்களுக்கு தெரியவந்தது. உடனே பொதுமக்கள் திரண்டு சென்று மணல் ஏற்றி சென்ற அந்த 2 லாரிகளையும் சிறை பிடித்தனர். இது குறித்து தாராபுரம் வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனாலும் நீண்டநேரமாகியும் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அந்த 2 லாரிகளையும் மூலனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரணை செய்ய மூலனூர் போலீசார் அந்த இரண்டு மணல் லாரிகளையும் தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story