வெண்ணந்தூர் அருகே தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை


வெண்ணந்தூர் அருகே தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 22 Sept 2018 4:15 AM IST (Updated: 22 Sept 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

வெண்ணந்தூர் அருகே தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வெண்ணந்தூர்,

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் இருந்து ராசிபுரம், நாமக்கல், சேலம் பகுதிகளுக்கு சென்று வர வெண்ணந்தூர்-ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையை பிரதான சாலையாக வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் வெள்ளை பிள்ளையார் கோவில் அருகில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது மண் சாலை என்பதால் பஸ், வேன், கார்உள்ளிட்ட வாகனங்கள் வழியாக செல்லும்போது புழுதி கிளம்புகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. எனவே தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

இந்த சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு செல்லும்போது புழுதி கிளம்பி சாலையை கடந்துசெல்ல முடியாத நிலை உள்ளது. ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் அவசர நேரங்களில் வேகமாக செல்ல முடியவில்லை. எனவே தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story