மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் முயற்சி


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியல் முயற்சி
x
தினத்தந்தி 21 Sep 2018 9:45 PM GMT (Updated: 21 Sep 2018 10:02 PM GMT)

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் மேம்பால பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ரெயில் மறியலுக்கு முயன்றனர்.

திண்டுக்கல்,


திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் பழனி, கரூர், திருச்சி ஆகிய 3 ஊர்களுக்கான ரெயில் பாதைகள் செல்கின்றன. இதனால் ஏதேனும் ஒரு ரெயில்வே கேட் எப்போதும் மூடியே இருக்கும். இதனால் பாலகிருஷ்ணாபுரம் மட்டுமின்றி சிலுவத்தூர் சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால், அந்த பகுதியில் நிறைய வீடுகள் உள்ளன. அந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு தொகை கிடைக்காததால் பலர் காலி செய்யவில்லை. இதனால் மேம்பாலம் கட்டும் பணி மிகவும் மந்தமாக நடக்கிறது. மேலும் 3 ரெயில் பாதைகளுக்கு கீழ் தலா ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சுரங்கப்பாதைகளும் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதை கண்டித்தும், மேம்பால பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தியும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்தனர். மேலும் நேற்று காலையில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் ஒன்றிய செயலாளர் அஜாய்கோஷ் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், பொதுமக்கள் அந்த பகுதியில் திரண்டனர்.

இதுபற்றி அறிந்ததும் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா தலைமையிலான அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வீட்டு உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கி, மேம்பால கட்டுமான பணிகளை விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதேபோல் சுரங்கப்பாதைகளை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில் மறியல் முயற்சியை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story