முசிறி அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


முசிறி அருகே குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
x
தினத்தந்தி 21 Sep 2018 10:41 PM GMT (Updated: 21 Sep 2018 10:41 PM GMT)

முசிறி அருகே ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு மற்றொரு சம்பவத்தில் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியானார்கள்.

முசிறி,

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சிலோன்காலனி பகுதியில் வசித்து வருபவர் சிவானந்தன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சித்ரா. இவர்களது இளைய மகன் கலைவேந்தன் (வயது7). முசிறியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

இதே பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவர்களது மகன் சூர்யா (9). இவன் முசிறி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். முகரம் பண்டிகையை முன்னிட்டு நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் சிறுவர்கள் கலைவேந்தனும், சூர்யாவும் வீட்டில் இருந்தனர். வழக்கம்போல் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டதால் சிறுவர்கள் அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர்.

பின்னர் கலைவேந்தன், சூர்யா மற்றும் மற்றொரு சிறுவன் எழில்வேந்தன் ஆகிய மூன்று பேரும் புதுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தெற்கு மேடு குட்டையில் தேங்கி இருந்த மழைநீரில் மீன் உள்ளதா என பார்க்க சென்றதாக தெரிகிறது.

அப்போது குட்டையில் இறங்கிய கலைவேந்தனும், சூர்யாவும் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினர். இதனை அருகில் இருந்து பார்த்த சிறுவன் எழில்வேந்தன் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிச்சென்று குட்டையில் மூழ்கிய கலைவேந்தன், சூர்யா இருவரையும் பிணமாக மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிந்து இறந்துபோன சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

திருச்சி வாத்தலை அருகே உள்ள சின்னகொடுந்துரை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சோழன். இவரது மகன் கார்த்தி (வயது 16) இவர் திருச்சி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் தொழிற்படிப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை நாள் என்பதால் கார்த்தி நண்பர்களுடன் சேர்ந்து ஆமூர் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அங்கு நண்பர்களுடன் குளித்துகொண்டிருந்த அவர் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனைகண்ட நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் கார்த்தி தண்ணீரில் கை அசைத்தபடி மூழ்கிவிட்டார். இதனையடுத்து வாத்தலை போலீசாருக்கும், முசிறி தீயணைப்பு மீட்புபணித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினரின் தீவிர தேடுதல் வேட்டையில் தண்ணீரில் மூழ்கிய கார்த்தி பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை வாத்தலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story