கரூர் அருகே பெட்ரோல்-டீசல் பதுக்கி வைத்திருந்த குடோனில் தீ விபத்து


கரூர் அருகே பெட்ரோல்-டீசல் பதுக்கி வைத்திருந்த குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 21 Sep 2018 11:20 PM GMT (Updated: 2018-09-22T04:50:08+05:30)

கரூர் அருகே பெட்ரோல்- டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் அருகேயுள்ள ஆத்தூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கிருந்து டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் ஆகியவை மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் லாரிகளில் கொண்டு செல்லப்படும் பெட்ரோல்- டீசலை சிலர் திருடி, அந்த சேமிப்பு கிடங்கின் அருகேயுள்ள குடோனில் பேரல்களில் பிடித்து வைத்து விற்பனை செய்துள்ளனர். தற்போது பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை காரணம் காட்டி ரூ.70, ரூ.60, ரூ.50 என்கிற விலையில் குடோனில் உள்ள பெட்ரோல், டீசலை சிலர் சட்டவிரோதமாக விற்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த குடோனில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் பேரல்களில் இருந்து பெட்ரோல், டீசல் ஆகியவை தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது அங்கிருந்த நபர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி தப்பிவிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக இது பற்றி கரூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜவேல் தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் நுரை தணிப்பானை பீய்ச்சி அடித்து சுமார் 1½ மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இதற்கிடையே ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கை முற்றுகையிட்டு, இதுபோல் பாதுகாப்பின்றி திருட்டு தனமாக எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுவதை பாரத் பெட்ரோலிய நிறுவனத்தினர் தடுக்க வேண்டும். மேலும் எரிபொருள் சேமிப்பு கிடங்கிலும் உரிய பாதுகாப்பினை துரிதமாக வைத்திருக்க வேண்டும். அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் கிராம மக்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். சமீபத்தில் நெல்லையில் ஒரு பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடும் போது ஏற்பட்ட தீவிபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். எனவே அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, வாங்கல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் முற்றுகை போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

மேலும் தீ பிடித்த குடோனில் ஆய்வு செய்த போலீசார், அங்கு கலப்படத்துடன் 400 லிட்டர் பெட்ரோல், டீசல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் பெட்ரோலிய நிறுவன லாரிகளில் இருந்து எரிபொருள்களை திருடிய நபர்கள் யார்? என்பது பற்றி விசாரித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தீவிரமாக இருக்கின்றனர். இந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story