வில்லியனூர் அருகே நடந்த பயங்கர சம்பவம்: தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்


வில்லியனூர் அருகே நடந்த பயங்கர சம்பவம்: தோ‌ஷம் கழிப்பதாக பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்
x
தினத்தந்தி 22 Sep 2018 12:15 AM GMT (Updated: 22 Sep 2018 12:14 AM GMT)

வில்லியனூர் அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர் போலீஸ் பிடியில் சிக்கினார்.

வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கம் மாஞ்சாலை வீதியை சேர்ந்தவர் அசோக் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் அரசூரை சேர்ந்த கிருஷ்ணவேணி (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு ஜெயஸ்ரீ (3) என்ற மகளும், ஜெயகணேஷ் (2) என்ற மகனும் உள்ளனர். கிருஷ்ணவேணி மீண்டும் கர்ப்பமாக இருந்தார்.

கடந்த 19–ந் தேதி மாலை திடீரென்று அவர் மாயமானார். இந்தநிலையில் பாகூர் சாலையில் செங்கன்ஓடை பகுதியில் உள்ள காளி கோவில் அருகே சேலையால் கைகள் கட்டப்பட்டு, கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கிருஷ்ணவேணி கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இதுபற்றி போலீசாருக்கு அவரது கணவர் அசோக் தான் முதலில் தகவல் தெரிவித்தார். உடனே சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா மற்றும் போலீசார் அங்கு வந்து கிருஷ்ணவேணியின் உடலை பார்வையிட்டு, விசாரித்தனர். போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அங்கிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனி அருகே போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.

கிருஷ்ணவேணி அணிந்திருந்த தாலிச்சங்கிலி, தோடு ஆகியவை மாயமாகி இருந்தன. அந்த இடத்தில் சிமெண்டு சாக்கு விரிக்கப்பட்டு அதில் உட்கார்ந்து சிலர் பேசிக் கொண்டு இருந்ததற்கான அடையாளமும் காணப்பட்டது.

மேலும் அந்த இடத்தில் எலுமிச்சம்பழம், குங்குமம் ஆகியவை சிதறிக்கிடந்தன. கொலை செய்யப்பட்டு கிடந்த கிருஷ்ணவேணி சிவப்புநிறத்தில் சேலை அணிந்து, பூச்சூடி மங்களகரமாக கிடந்தார். எனவே ஏதோ ஒரு நோக்கத்துக்காகத் தான் அவர் கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர்.

கொலை சம்பவம் நடந்த பகுதி மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். பெரும்பாலும் அந்த இடத்துக்கு யாரும் செல்வதில்லை. அப்படி இருக்கும்போது கிருஷ்ணவேணி அங்கு கொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து முதன் முதலில் தகவல் தெரிவித்த அவரது கணவர் அசோக் மீது போலீசுக்கு சந்தேகத்தை வலுப்படுத்தியது.

அவரிடம் போலீசார் அதிரடியாக விசாரித்ததில் அசோக்கின் பக்கத்து வீட்டில் குடியிருந்து வந்த கோவிந்தராஜ் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அதாவது, அசோக்கின் தங்கைக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்துள்ளது.

இதுபற்றி அறிந்து பக்கத்து வீட்டை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு அசோக்கின் குடும்பத்தினரை அழைத்துச் சென்று தோ‌ஷம் கழித்துள்ளார்.

இதையடுத்து சில மாதங்களில் கோவிந்தராஜின் ஏற்பாட்டில் அசோக்கின் தங்கைக்கு திருமணம் நடந்தது. இதனால் அவரை அசோக் குடும்பத்தினர் முழுமையாக நம்பினர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோவிந்தராஜ் அசோக்கின் வீட்டில் ஏவல், பில்லி சூனியம், செய்வினை வைக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரே தகடு பதித்து மறைத்து வைத்து, அதை எடுத்துள்ளார்.

இதையெல்லாம் பார்த்து அசோக்கின் மனைவி, தாய், தங்கை கோவிந்தராஜை மிகவும் நம்பினர். இதை சாதகமாக பயன்படுத்தி ஒருவரை ஒருவர் அறியாத வகையில் தனித்தனியாக பேசி அந்த பெண்களிடம் இருந்து நகைகள், பணம் என வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் அசோக்கின் தங்கை திருமணத்துக்கு போட்ட 5 பவுன் நகைகள் வீட்டில் இருப்பதை கோவிந்தராஜ் தெரிந்து கொண்டார். அந்த நகையை அபகரிக்க திட்டமிட்ட கோவிந்தராஜ், கிருஷ்ணவேணியிடம், கணவர் உன்னை விட்டு பிரிந்து சென்று விடுவார். உன்னுடன் அவர் சேர்ந்து வாழவேண்டுமென்றால் அதற்கு தோ‌ஷம் கழிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய கடந்த 19–ந்தேதி கிருஷ்ணவேணி வீட்டில் இருந்த 5 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு பால் ஊற்ற செல்வதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டு புறப்பட்டார். ஊரின் ஒரு பகுதியில் நின்று இருந்த கிருஷ்ணவேணியை ஏற்கனவே தெரிவித்து இருந்தபடி அங்கு வந்த கோவிந்தராஜ் தனது மோட்டார் சைக்கிளில் காளி கோவிலுக்கு அழைத்துச்சென்றார்.

அங்கு சென்றதும் தோ‌ஷம் கழிக்கும்போது மற்றவர்கள் பார்வை பட்டால் அது பலிக்காது என்று கிருஷ்ணவேணியை கோவிந்தராஜ் மீண்டும் நம்ப வைத்து நாடகமாடினார். மறைவான இடத்தில் இருந்த மரத்தின் அடியில் பிளாஸ்டிக் சாக்கு விரித்து அதில் கிருஷ்ணவேணியை அமரவைத்தார். பின்னர் அவரது கையில் எலுமிச்சம் பழத்தை கொடுத்து, இரு கைகளையும் அவரது சேலையால் கட்டியுள்ளார்.

கணவர் தன்னுடன் சேர்ந்து இருக்கவேண்டி கண்களை மூடிக்கொண்டு வேண்டிக் கொள் என்று கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். அதை நம்பி கட்டப்பட்ட கைகளுடன் கண்களை மூடி கிருஷ்ணவேணி தியானம் செய்தார்.

அப்போது அவரது கழுத்தில் கோவிந்தராஜ் கத்தியால் அறுத்தார். சிறிது நேரத்தில் ரத்தம் பீறிட்டு மயங்கி கிடந்த போது அவர் அணிந்து இருந்த தாலிச்சங்கிலி, கம்மல் மற்றும் அவர் கொண்டு வந்திருந்த 5 பவுன் நகைகளுடன் கோவிந்தராஜ் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்

கிருஷ்ணவேணி மாயமானது குறித்து அசோக்கும் அவரது குடும்பத்தினரும் தேடிய போது அவர்களுடன் சேர்ந்து எதுவும் தெரியாதது போல் கோவிந்தராஜும் தேடி உள்ளார். மனைவி காணாமல் போனது பற்றி போலீசில் புகார் கொடுக்கப் போவதாக அசோக் தெரிவித்த போது ஒருநாள் பொறுத்திருந்து புகார் செய்யலாம் என்று அவரிடம் கோவிந்தராஜ் கூறியுள்ளார்.

இந்தநிலையில் தான் போலீசாரின் தீவிர விசாரணையில் கோவிந்தராஜ் சிக்கினார். அவரிடம் போலீசார் அதிரடியாக விசாரித்ததில் தான் மேற்கண்ட திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாயின.

பக்கத்து வீட்டில் நட்பாக பழகி, பில்லி சூனியம் இருப்பதாக கூறி நம்ப வைத்து குடும்பத்தையே ஆட்டிப்படைத்து முடிவில் நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு இளம் பெண் ஒருவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story