வாணியம்பாடி சுங்கச்சாவடியில் ரூ.10 லட்சம் குட்காவுடன் லாரி பறிமுதல் 3 பேர் கைது


வாணியம்பாடி சுங்கச்சாவடியில் ரூ.10 லட்சம் குட்காவுடன் லாரி பறிமுதல் 3 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2018 4:00 AM IST (Updated: 22 Sept 2018 10:24 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி சுங்கச்சாவடியில் போலீசார் நடத்திய சோதனையில் குட்கா கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ‘பிரஸ்’ என ஸ்டிக்கர் ஒட்டி காரில் வந்தவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாணியம்பாடி,

உடலுக்கு கேடு விளைவிக்கும் குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனைக்கு நாடு முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெட்டிக்கடைகள் உள்பட அனைத்து கடைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தடையை மீறி கர்நாடக மாநிலத்திலிருந்து வேலூருக்கு குட்கா கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துக்கோவிலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அதிலிருந்த ஆவணங்களை பார்த்து டிரைவரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக கூறினார். அதே நேரத்தில் ‘பிரஸ்’ (பத்திரிகை) என்ற ஸ்டிக்கர் ஒட்டிய காரும் வந்தது. அந்த காரில் வந்தவர்கள் லாரி டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சாலையோரம் நிறுத்தச்செய்து சோதனையிட்டபோது அதில் இருந்த பெட்டிகளில் குட்கா இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து ‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்தவர்களையும் பிடித்தனர். லாரியில் மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை ஓட்டி வந்த வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் பாபு (வயது 42) என்பவரை கைது செய்தனர்.

‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் வந்தவர்களும் வேலூர் சேண்பாக்கம் பகுதியில் வசிக்கும் ரங்கராஜ் (32), சுபோநாத் (30) என்பது தெரியவந்தது. அவர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது பரபரப்பான தகவல் கிடைத்தது.

பெங்களூருவிலிருந்து குட்கா பொருட்களை லாரியில் வேலூருக்கு கொண்டு வந்து அதனை ஒரு இடத்தில் நிறுத்திவிடுவார்கள். பின்னர் அதிலிருந்து குட்கா பெட்டிகளை வேலூரில் உள்ள ஏஜென்சிக்கும், பல்வேறு இடங்களில் உள்ள வியாபாரிகளுக்கும் அனுப்பி வைத்து விடுவார்கள். ‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டி வந்தால் போலீசார் நம்மை சோதனை செய்ய மாட்டார்கள். எனவே குட்கா வாகனத்தை பிடித்தால் பத்திரிகையாளர்கள் போர்வையில் லாரியை விடுவிக்க செய்து தப்பிவிடலாம் என நினைத்து இவ்வாறு செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து லாரி மற்றும் ‘பிரஸ்’ ஸ்டிக்கர் ஒட்டிய காரையும் போலீசார் பறிமுதல் செய்து கைதான 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story