பெருந்துறை அருகே ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை; போலீசார் விசாரணை
பெருந்துறை அருகே தூக்குப்போட்டு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை,
பெருந்துறை அருகே உள்ள சென்னியவலசு பகுதியை சேர்ந்தவர் வீரன். இறந்துவிட்டார். இவருடைய மனைவி நாகஜோதி. கூலித்தொழிலாளி. இவர்களுக்கு தமிழ்செல்வன் (வயது 25) என்ற மகனும், பவித்ரா (22) என்ற மகளும் உள்ளனர். தமிழ்செல்வன், பெருந்துறையில் உள்ள இரு சக்கர வாகன ஷோரூமில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். பவித்ரா, பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி ஆய்வகத்தில் பரிசோதனையாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை பவித்ராவின் தாய் நாகஜோதியும், அண்ணன் தமிழ்செல்வனும் வேலைக்கு சென்றுவிட்டனர். மாலையில் வெகுநேரமாகியும் பவித்ராவின் வீடு திறக்கப்படவில்லை. இதனால் அவருடைய வீட்டின் அருகில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டு பவித்ராவின் வீட்டு கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து பார்த்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் மின் விசிறி கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு பவித்ரா தற்கொலை செய்து கொண்டதை கண்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி பெருந்துறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பவித்ராவின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறிவித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.