தமிழகத்தில், 10 ஆயிரம் கோவில்களை காணவில்லை திருக்கடையூரில், எச்.ராஜா பேட்டி


தமிழகத்தில், 10 ஆயிரம் கோவில்களை காணவில்லை திருக்கடையூரில், எச்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 22 Sep 2018 11:00 PM GMT (Updated: 22 Sep 2018 5:15 PM GMT)

தமிழகத்தில், 10 ஆயிரம் கோவில்களை காணவில்லை என்று திருக்கடையூரில் எச்.ராஜா கூறினார்.

திருக்கடையூர்,

நெல்லையில் நடைபெற இருந்த தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு ஆகம விதிகளை காரணம் காட்டி இந்துசமய அறநிலையத்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆகம விதிகள் குறித்து பேச இந்துசமய அறநிலையத்துறைக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி கோவில் நிர்வாகம் நடை பெறவில்லை. இது கண்டனத்திற்கு உரியது.

கோவில் வருமானத்தில் இருந்து 18 சதவீதம் மட்டுமே அலுவலர்களின் ஊதியத்திற்காக எடுத்து கொள்ளப்பட வேண்டும். ஆனால் முழுத்தொகையும் முறைகேடாக செலவிடப்பட்டு வருகிறது. இந்துசமய அறநிலையத்துறை ஆவணங்களின்படி தமிழகத்தில் உள்ள 38 ஆயிரத்து 646 கோவில்களில் 10 ஆயிரம் கோவில்களை காணவில்லை. அவற்றை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்–அமைச்சரிடம் புகார்

நூற்றுக்கணக்கான கோவில்களில் கருவறைகள் இருந்த இடத்தில் வணிக வளாகங்கள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்று கோவில்களின் அவலநிலை மற்றும் நிர்வாக சீர்கேடுகள் குறித்து ஆதாரங்களுடன் தமிழக முதல்–அமைச்சரிடம் புகார் கொடுத்துள்ளேன்.

இந்த நாட்டில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள், தங்களது வழிபாட்டு உரிமைக்காக போராடும் நிலை உள்ளது. இதுகுறித்து முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
எவ்வித அச்சமும் இல்லை

என்மீது புகார் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கு பதியப்படவில்லை. தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. நான் தலைமறைவாக இல்லை. சிலை திருட்டு, ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளாக உள்ளனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலின் பணி பாராட்டத்தக்க வகையில் உள்ளது. தமிழக அரசு, அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எனக்கு எதிராக அறநிலையத்துறை அதிகாரிகள் போராடுவது குறித்து எனக்கு எவ்வித அச்சமும் இல்லை. மாறாக எனது கருத்துக்கள் மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு அது உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story