திருத்துறைப்பூண்டி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 10 விவசாயிகள் மீது வழக்கு


திருத்துறைப்பூண்டி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 10 விவசாயிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 Sept 2018 3:45 AM IST (Updated: 23 Sept 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 10 விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள கடைமடை பகுதியில் நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு செய்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகுவதை பார்த்து விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்தநிலையில் வெண்ணாறு பிரிவு பாமணி ஆறு, கோரையாறு ஆகிய ஆறுகளில் இருந்து பாசனம் பெறும் பாமணி, கொக்கலாடி, முள்ளுர், தேசிங்குராஜபுரம், கொருக்கை, தலைக்காடு, சேகல், சேவியக்காடு, மகாராஜபுரம், உம்பளச்சேரி உள்பட 100-க்கு மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருகுவதை காப்பாற்ற உடனே தண்ணீர் திறக்க வலியுறுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பாமணி கடைத்தெருவில் நேற்றுமுன்தினம் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு பாமணியை சேர்ந்த விவசாயி முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தண்ணீர் திறக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் தூத்துக்குடி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட முருகானந்தம் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story