இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்


இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2018 4:15 AM IST (Updated: 23 Sept 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் கார்டு, குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் நல சங்க கூட்டம் தலைவர் ஜெயபால் தலைமையில், செயலாளர் பழனிவேல் முன்னிலையில் தஞ்சையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பின்னர் சங்கத்தின் தலைவர் ஜெயபால், செயலாளர் பழனிவேல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 2 தாலுகாக்களில் மட்டும் 20 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் உள்ளனர். இவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை மற்றும் ரேஸ்மடி வலைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் மீன்வளம் மற்றும் கடல்வளம் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர், இயக்குனர் மற்றும் கலெக்டர், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் நேரிலும், தபால் மூலமும் ஏராளமான மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் 34 கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே இதில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 20 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்களும் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைத்து, குடும்பத்துடன் போராட்டம் நடத்த உள்ளோம். மேலும் நாட்டுப்படகு மீனவர்கள் 1,300 படகுகளுக்கு உரிமம் வழங்கக்கோரி விண்ணப்பித்து 6 மாதம் ஆகியும் இன்னும் வழங்கப்படவில்லை.

தஞ்சை மாவட்ட மீன்வள உதவி இயக்குனரும் இதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை மாற்ற வேண்டும். இலங்கை- இந்திய மீனவர்களிடையே பிரச்சினைக்கு காரணமும் இந்த இரட்டைமடி வலைகளை பயன்படுத்துவதால் தான். எனவே உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story