வாக்காளர் பெயர் சேர்ப்பை கண்காணிக்க அலுவலர் நியமிக்க வேண்டும் - மாநில தேர்தல் ஆணையர் உத்தரவு


வாக்காளர் பெயர் சேர்ப்பை கண்காணிக்க அலுவலர் நியமிக்க வேண்டும் - மாநில தேர்தல் ஆணையர் உத்தரவு
x
தினத்தந்தி 22 Sep 2018 10:30 PM GMT (Updated: 22 Sep 2018 7:20 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதை கண்காணிக்க அலுவலர் நியமிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர்.

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சிவஞானம் முன்னிலையில் நடந்தது. இதில் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் வாக்குச் சாவடிகள் கூடுதலாக தேவைப்பட்டால் அதற்கான கருத்துக்களை கலெக்டருக்கு அனுப்பி வாக்குச்சாவடிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கான அறிக்கையினை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். வாக்குச் சாவடி கட்டிடம் பழுதடைந்திருப்பின் அதே வளாகத்தில் உள்ள வேறு கட்டிடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

வாக்குச்சாவடிகளின் தற்போதைய நிலையினை ஆய்வு செய்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். வார்டு மறுவரையறை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு, தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்கள் உள்ளாட்சி தேர்தலின் போது வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் விடுதலின்றி சேர்க்கப்பட வேண்டும். இதனை கண்காணிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் எவ்வித பிழையின்றி, வாக்காளர் எவரும் விடுபடாத வண்ணம் தயாரிக்கப்பட வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கூடுதலாக தேவைப்படும் பட்சத்தில் அறிக்கை அனுப்ப வேண்டும். எந்திரங்களை இயக்குவது தொடர்பான பயிற்சி தேர்தல் அலுவலர்களுக்கு உரிய முறையில் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் உதய குமார், திட்ட இயக்குனர் சுரேஷ், தேர்தல் ஆணைய உதவி இயக்குனர் சம்பத் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

பின்னர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறையினையும், வாக்குச்சீட்டு வைக்கப்பட்டுள்ள அறையினையும் அவர் பார்வையிட்டார்.

அதனைத்தொடர்ந்து, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சி அலுவலகங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள சட்ட முறையிலான படிவங்கள் மற்றும் கையேடுகளையும், விருதுநகர், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளின் இருப்பு, சட்ட முறையிலான படிவங்கள் மற்றும் கையேடுகளையும் ஆய்வு செய்தார்.

Next Story