நாகர்கோவில் மாநகராட்சி ஆகிறது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


நாகர்கோவில் மாநகராட்சி ஆகிறது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Sept 2018 4:45 AM IST (Updated: 23 Sept 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

“நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

நாகர்கோவில்,

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடந்தது.

விழாவில் தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது அவர், நூற்றாண்டு விழா மேடையில் வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

விழாவில் ரூ.13 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 28 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். அப்போது அதற்கான கல்வெட்டுகளை ரிமோட் மூலம் திறந்து வைத்தார். மேலும் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.31 கோடியே 34 லட்சம் மதிப்பில் கட்டப்பட இருக்கும் கட்டிட பணிகளையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மகளிர் சுயஉதவி குழுவினர், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் உள்பட 14 ஆயிரத்து 911 பேருக்கு ரூ.67 கோடியே 27 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

கன்னியாகுமரிக்கு மட்டும் வருடந்தோறும் 75 லட்சம் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் சுமார் 22 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே தற்போது விவேகானந்தர் பாறையில் உள்ள நினைவு மண்டபத்திற்கு படகின் மூலம் செல்ல வாய்ப்புள்ளது. மீதமுள்ள சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடுப்பதற்காக சுமார் ரூ.6 கோடி செலவில் புதியதாக 2 படகுகள் வாங்கப்பட உள்ளன.

மேலும், ஒரே சமயத்தில் 3 படகுகள் விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்கு ஏதுவாக, கூடுதலாக 2 படகு அணையும் தளங்கள் ரூ.20 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படும். கூடுதலாக, கன்னியாகுமரியில் இருந்து விவேகானந்தர் பாறை செல்ல ரோப் கார் வசதியும், விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ள பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கு செல்ல ஒரு கடல் வழி பாலம் ஆகியவையும் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சுமார் ரூ.120 கோடி செலவில் அமைக்கப்படும். இதன்மூலம், சுற்றுலா பயணிகளுடைய எண்ணம் நிறைவேறும். இந்த கன்னியாகுமரி மாவட்ட மக்கள், குறிப்பாக கன்னியாகுமரியில் இருக்கின்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

விளவங்கோடு வட்டத்தினை பிரித்து கிள்ளியூரை தலைமையிடமாக கொண்டு புதிய கிள்ளியூர் வருவாய் வட்டம் அமைக்கப்படும். கல்குளம் வட்டத்தினை பிரித்து, செருப்பலூரை தலைமையிடமாக கொண்டு புதிய திருவட்டார் வருவாய் வட்டம் அமைக்கப்படும். கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க ஏதுவாகவும் மற்றும் செண்பகராமன்புதூர் துணை மின் நிலையத்தின் மின்பளுவை குறைக்கும் வகையிலும் ஒரு புதிய 230/110 கி.வோ. வளி மகாப்பு துணை மின் நிலையம் ரூ.368 கோடியே 45 லட்சம் மதிப்பில் தக்கலையில் அமைக்கப்படும்.

எல்லைகள் மறுசீரமைப்பு குழுவின் பணி நிறைவடைந்தவுடன் நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்படும். உங்களுடைய மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், டெல்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க.வின் அனைத்து நிர்வாகிகள், பொதுமக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, நாகர்கோவில் மக்களுடைய கோரிக்கையையும் ஏற்று இந்த நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் தற்போது 100 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதை அதிகரிக்க வேண்டும் என்று இந்த மாவட்டத்தில் இருக்கின்ற பலபேர் கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். அந்த கோரிக்கையின் அடிப்படையிலே எம்.பி.பி.எஸ். இடங்கள் 150 ஆக உயர்த்தப்படும்.

கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.8 கோடியே 82 லட்சம் மதிப்பில் அதிநவீன உபகரணங்கள், ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிதாக ‘கேத் லேப்’ கருவி மற்றும் ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 5 புதிய அதிநவீன டயாலிசிஸ் கருவிகளும் நிறுவப்படும். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டத்தில் ரூ.2 கோடியே 68 லட்சம் செலவில் 20 சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு, தஞ்சை, திண்டுக்கல் ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் 13-வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.

Next Story