நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்


நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 23 Sept 2018 4:30 AM IST (Updated: 23 Sept 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

நாகர்கோவில்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கை நிகழ்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அவரது அரிய புகைப்படங்கள் நிறைந்த கண்காட்சி விழா பந்தல் அருகில் நடந்தது.

கண்காட்சியை தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், அன்பழகன், மணிகண்டன், ஓ.எஸ். மணியன், சி.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. குமரி மாவட்ட செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன் (கிழக்கு), டி.ஜான்தங்கம் (மேற்கு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் எம்.ஜி.ஆர். வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், வரலாற்று நிகழ்வுகள் அடங்கிய அரிய புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகள், மலர்களால் முதலை, வாத்து உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டு இருந்தன. எம்.ஜி.ஆர். ரிக்‌ஷா ஓட்டுவது போன்று காய்கறிகளால் வடிவமைக்கப்பட்டுள்ள சிலை கண்காட்சியை பார்வையிட்ட அனைவரையும் கவர்ந்தது.

பள்ளி கல்வித்துறை, மீன்வளத்துறை, ஆவின்பாலகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் அந்தந்த துறைகளின் சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன. கண்காட்சியை துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பார்வையிட்டனர்.

முன்னதாக நேற்று காலையில் குமரி மாவட்டத்துக்கு வந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வடசேரியில் தளவாய்சுந்தரம் தலைமையில் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

Next Story