மானாமதுரை அருகே மயில்களை வி‌ஷம் வைத்து கொன்ற விவசாயி கைது


மானாமதுரை அருகே மயில்களை வி‌ஷம் வைத்து கொன்ற விவசாயி கைது
x
தினத்தந்தி 22 Sep 2018 10:45 PM GMT (Updated: 2018-09-23T01:10:40+05:30)

மானாமதுரை அருகே மயில்களை வி‌ஷம் வைத்து கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டார்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ராஜகம்பீரம், முத்தனேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. மேலும் இங்கு அதிக எண்ணிக்கையில் மயில்கள் காணப்படுகின்றன. இந்தநிலையில் ராஜகம்பீரம் பகுதியில் ஓரிடத்தில் மொத்தமாக 7 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இதனை பார்த்த விவசாயிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மயில்களை வி‌ஷம் வைத்து கொன்றது தெரியவந்தது.

மயில்களுக்கு வி‌ஷம் வைத்தது தொடர்பாக மானாமதுரை போலீசார், ராஜகம்பீரத்தை சேர்ந்த விவசாயி சந்திரனை (வயது 50) கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், பயிர்களை மயில்கள் சேதப்படுத்தியதால் வி‌ஷம் வைத்து கொன்றதாக அவர் தெரிவித்தார்.

மானாமதுரை பகுதியில் சமீப காலமாக மயில்கள் மர்மமான முறையில் இறந்துபோகும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story