கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும் அமைச்சர் தகவல்


கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 22 Sep 2018 11:00 PM GMT (Updated: 22 Sep 2018 9:05 PM GMT)

கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

கரூர்,

கரூர் மாவட்டம் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சாமி கோவில் வளாகத்திலும், தாந்தோன்றிமலையிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக நடைபாதை தளம் அமைக்கவும், கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இது தொடர்பாக அங்கு சென்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.

நடைபயிற்சி மேற்கொள்ள...

பின்னர் இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பதற்காக சாலைகள், கல்லூரி வளாகங்கள் போன்ற பகுதிகளில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதை கருத்தில் கொண்டு நகரின் வடக்கு பகுதியில் வசிப்பவர்களுக்கு வசதியாக வெண்ணைமலை பாலசுப்ரமணிய சாமி கோவில் வளாகத்தில் பூங்கா அமைக்கப்படும்.

மேலும் அந்த கோவிலை சுற்றிலும் தேரோடும் வீதியில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதை அமைக்கப்படும். திருவிழா காலங்களை தவிர மற்ற நாட்களில் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் நகரின் தெற்கு பகுதியில் வசிப்பவர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைத்து குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் செய்து தரப்படும்.

நகரின் மையப்பகுதியில் வசிப்பவர்களுக்கு திருவள்ளுவர் விளை யாட்டு மைதானத்தில் மேற்கு பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே உள் அரங்க உடற்பயிற்சிக் கூடம் அமைக்கவும், பழைய அமராவதி பாலத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதற்கும் வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சடையப்பன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, நகராட்சி ஆணையர் செந்தில்முருகன், மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story