சமயபுரம் கோவில் அதிகாரிகள் புகார்: எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு


சமயபுரம் கோவில் அதிகாரிகள் புகார்: எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 22 Sep 2018 10:30 PM GMT (Updated: 22 Sep 2018 9:25 PM GMT)

சமயபுரம் மாரியம்மன் கோவில் அதிகாரிகள் உள்ளிட்டோர் கொடுத்த புகாரின்பேரில் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சமயபுரம்,

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசுகையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளையும், அவர்கள் குடும்ப பெண்களையும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் கோவில் மேலாளர் ஹரிஹர சுப்பிரமணியன், முதுநிலை திருக்கோவில் பணியாளர் சங்க தலைவர் கி.ரமணி, செயலாளர் எம்.பழனிவேல், முதுநிலை திருக்கோவில் பணியாளர் சங்க மாநில துணைச் செயலாளரும், அறநிலையத்துறை பணியாளர் சங்க கூட்டமைப்பின் திருச்சி மண்டல பொறுப்பாளருமான ஜெயபாலன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

4 பிரிவுகளில் வழக்கு

புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன், எச்.ராஜா மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுதல், அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசுதல், பெண்களை அவதூறாக பேசுதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளார். 

Next Story