வாக்காளர் பட்டியல் திருத்தம் சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது


வாக்காளர் பட்டியல் திருத்தம் சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 22 Sep 2018 10:45 PM GMT (Updated: 22 Sep 2018 9:51 PM GMT)

கங்கலேரியில் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 ஊராட்சிகளிலும் வாக்காளர் திருத்த முறை சிறப்பு பட்டியல் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கங்கலேரி ஊராட்சியில், வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல், வாக்காளர் முகவரி, திருத்தம் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவு விவரங்களை அறிந்து கொள்ள சிறப்பு கிராம சபை கூட்டம் கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

18 வயது பூர்த்தி அடைந்தவர்களை வாக்காளர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 1.1.2019-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க முறை திருத்தம் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கடந்த 9-ந் தேதி சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடியிலும் நடந்தது.

அடுத்த கட்டமாக நாளை (அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை) வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு இரண்டாம் நாள் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்த விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் தொடர்பான படிவம்-6,7,8 மற்றும் 8ஏ விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அளிக்கலாம்.

மேலும் அரசு இ-சேவை மையங்களின் மூலமும் பொதுமக்கள் இணையவழியில் நேரடியாக உரிய படிவங்களை பதிவேற்றம் செய்து வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள விண்ணப்பிக்கலாம். இந்த கிராம சபை கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பாகம் எண், தொடர் எண் மற்றும் பெயர் விவரங்களை பொதுமக்கள் 100 சதவீதம் வாக்காளர் பெயர் பட்டியல் குறித்து சரிபார்த்து கொள்ளலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து புதிய வாக்காளர் பெயர் பட்டியலில் இடம் பெற்ற இளம் வாக்காளர்கள் 4 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகளை கலெக்டர் பிரபாகர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சுசீலாராணி, உதவி திட்ட அலுவலர் மாலா, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அன்பு குளோரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, பிரசன்னகுமார், தாசில்தார் சேகர், மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், ஊரக வளர்்ச்சித்துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story