திட்டக்குடி: என்ஜினீயர், தீக்குளித்து தற்கொலை - வேலை கிடைக்காததால் விபரீத முடிவு


திட்டக்குடி: என்ஜினீயர், தீக்குளித்து தற்கொலை - வேலை கிடைக்காததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 22 Sep 2018 11:00 PM GMT (Updated: 22 Sep 2018 9:59 PM GMT)

திட்டக்குடியில் வேலை கிடைக்காததால் என்ஜினீயர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

திட்டக்குடி,

வேலை கிடைக்காததால் என்ஜினீயர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு-

திட்டக்குடி மேலவீதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவர் பெண்ணாடத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்றார். இவருடைய மனைவி சிவகங்கை. இவர்களுக்கு கலைச்செல்வி, வனிதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். முருகன் (29) என்ற மகனும் இருந்தார். மெக்கானிக் என்ஜினீயரான இவர், கடந்த 5 ஆண்டுகளாக வேலை கேட்டு, பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில், ராமமூர்த்தி வெளியூர் சென்றிருந்தார். சிவகங்கை, தனது மகள்களுடன் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். முருகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

மதியம் 1.30 மணிக்கு வீட்டின் முன்பு நின்றிருந்த முருகன், திடீரென வீட்டுக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது வீடு முழுவதும் புகைமூட்டத்துடன் காணப்பட்டது. அங்கு உடல் கருகிய நிலையில் முருகன் பிணமாக கிடந்தார். மேலும் வீட்டின் ஒரு பகுதி தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயயை அணைத்தனர். இதனிடையே உறவினர் வீட்டுக்கு சென்ற சிவகங்கை, தனது மகள்களுடன் அங்கு வந்தார். முருகன் கருகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் கதறி அழுதனர்.

இந்த சம்வம் பற்றி தகவல் அறிந்ததும் திட்டக்குடி போலீசார் விரைந்து சென்று, முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த முருகன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story