வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Sep 2018 10:30 PM GMT (Updated: 22 Sep 2018 10:05 PM GMT)

இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கல்லூரி மாணவர்களுக்கு செயல் விளக்க பயிற்சி முகாமை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு பணியை மேற்கொள்வதற்காக கல்லூரி தூதுவர்களுக்கான செயல்விளக்க பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார்.

இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர்களை இணையதளத்தின் மூலம் எவ்வாறு சேர்ப்பது என்பது குறித்து தேர்தல் பிரிவு கணினி அலுவலர்கள், கல்லூரி தூதுவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.

கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தகுதியுள்ள கல்லூரி மாணவ, மாணவிகளின் பெயர்களை இணையதளம் மூலமாக பதிவு செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த பணிகளில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 54 கல்லூரிகளை சேர்ந்தவர்கள் தூதுவர்களாக ஈடுபட உள்ளர்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயிலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற தகுதி உள்ள மாணவர்களை 100 சதவீதம் கல்லூரி தூதுவர்களை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.

கூட்டத்தில் நாமக்கல் உதவி கலெக்டர் கிராந்திகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கண்ணன் மற்றும் அனைத்து கல்லூரிகளை சேர்ந்த கல்லூரி தூதுவர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story